இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம்.
சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு.
வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் பெருமளவில், ‘பட்டி’ என்று முடிவடைவதாக இருந்தது. மலைநாடு, சேரன் நாட்டின் பல ஊர்களின் பெயர்கள், ‘பாளையம்’ என்று முடிவதாக இருந்தது.
சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்துத் மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான அடித்தளம் அமைத்தவர்கள் பாண்டிய மன்னர்கள். தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் மிகச் சிறப்பாக வளர்த்தவர்கள் சோழர் மன்னர்கள். ஆனால் அவர்களுக்குள்ளும் பகைமைத் தீ இருந்தது.
மக்களால் பெரிதும் அறியப்பட்ட மன்னர்களான சிபிச்சக்கரவர்த்தி, கரிகால் சோழன், கோப்பெருஞ்சோழன் போன்றோர் வரிசையில் வந்த மன்னர்களுள் ராஜராஜ சோழனின் வரலாற்றை ஒரு எளிய நுாலாக வழங்கியிருக்கிறார் குன்றில்குமார்.
தஞ்சைப் பெரிய கோவிலின் இருட்டறையை முதலில் ஆய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஹூல்ட்ஸ் அங்குள்ள கல்வெட்டுகளை எழுத்துக்களை ஆய்ந்து பிரகதீசுவரர் கோவிலைக் கட்டியவர் சோழ மன்னன் ராஜ ராஜன் என்பதை வெளிப்படுத்தினார்.
ராஜராஜன் நடத்திய போர்கள் மற்றும் வெற்றிச் சாகசங்கள், உணவுப்பொருட்களின் விலைகள், மக்களுக்கு எளிய கடன்கள் வழங்கிய முறைகள், ஆலய வழிபாட்டு விபரங்கள், ஏழைகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், ஒருங்கிணைந்த பொருளாதாரத் திட்டம், நிலவரி நடைமுறைகள், கிராம சபை அதிகாரங்கள் போன்றவற்றைக் கல்வெட்டுகள் வாயிலாக கண்டறிந்தார்.
சோழர் காலத்தில் தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களில் நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. வடக்கே கங்கையைத் தாண்டியும் வென்றதால் கங்கை கொண்டான் என்றும், இந்தோனேஷியத் தீவுகளில் மிகப் பெரும் படைபல மிக்க கடாரத்தை வென்றதால் கடாரம் கொண்டான் என்றும் அழைக்கப்பட்டான்.
பிணக்கறுப்பான், கணக்கன், கீழ்க்கணக்கன், பாடிகாப்பான், தண்டுவான், அடிக்கீழ் நிற்பான் என்று அலுவலர்கள் பலரைக் கொண்டு உள்துறை நிர்வாக நடைமுறைகள் வெகு சிறப்பாக நடந்திருப்பது கல்வெட்டுகளில் காணப்பட்டன. பல்பொருள் பேரங்காடிகளை அன்றே தோற்றுவித்தவன் ராஜராஜன் என்பது வியப்பைத் தருகிறது.
கடல் கடந்த வாணிபங்கள், நீதிமன்ற அமைப்புகள், ஊதிய விகிதங்கள், உணவுப்பழக்கங்கள், வழிபாடுகள் என்று பல அரிய விபரங்களை உள்ளடக்கிய நுால். படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு