மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார்.
ராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் பதிவு செய்துள்ளார்.
வயதிலே ராஜாஜிக்கு ஐந்தாண்டு இளையவர் திரு.வி.க., என்ற போதிலும் அவரிடம் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் ராஜாஜி என்றும், தன்னுடைய மணிவிழாவிலே பங்கேற்ற ராஜாஜி, ம.பொ.சி., ஒரு மகான் என்று பேசியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
‘முரசொலியில் ராஜாஜி’ பெயர் வடமொழி உச்சரிப்பு இன்றி, ‘ராசாசி’ என்று இடம்பெற்ற போது, எம்.ஜி.ஆர்., என்னும் பெயரில் கிரந்த எழுத்தான, ‘ஜி’ இருக்கும் போது, என் பெயரில் ஜி விலக்கப்பட வேண்டியது ஏன் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுத, அதன் பின் ராஜாஜி என்று பிரசுரிப்பதை முரசொலி வழக்கமாகக் கொண்டது. (பக்., 127)
இப்படி ஏராளமான அரசியல், ஆன்மிகத் தகவல்கள். ஏறக்குறைய, 50 ஆண்டு கால தமிழக, இந்திய அரசியலோடு பின்னிப் பிணைந்த இந்த இரு தலைவர்கள் தொடர்பான தகவலடங்கிய இந்நுால் சுவாரஸ்யமான, ஆரோக்கியமான நட்பின் அடையாளமாக உள்ளது.
– பின்னலுாரான்