மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது.
‘மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் ஆழம் காட்டுகிறார்; அற்புதங்கள் செய்கிறார்.
முனைவர் அ.கோவிந்தராஜுவின் வாரம் வசப்படும் – 2016 என்ற நுாலில் அமைந்துள்ள சிறப்பு அம்சங்களை வகைப்படுத்துகிறார். கோவிந்தராஜுவின் புனைப் பெயர் இனியன் என்பதாகும்.
குழந்தைகளின் ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோருக்கும் இன்றியமையாத பங்கு உண்டு. பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதை, பெற்றோர் முதற்கண் நிறுத்திக் கொள்ள வேண்டும். அங்ஙனம் நிறுத்தினால், அவர்களுடைய குழந்தைகள் வாழ்வர்; நிறுத்தாவிட்டால் வீழ்வர் என கடுமையாக குறிப்பிடுகிறார்.
வண்டியை நிறுத்திப் பேசினால் அது செல்போன்; வண்டியை ஓட்டியபடி பேசினால் அது கொல்போன் என்பது, ஒரு கட்டுரையில் இனியன் கையாண்டு இருக்கும் புதுமொழி.
இப்படி, விமர்சனம் செய்ய எடுத்துக் கொள்ளும் நுால்களின் சிறப்புப் பகுதிகளை எடுத்து ஆள்வது, நுாலாசிரியரின் இனிய இலக்கிய அனுபவம்.
– எஸ்.குரு