உயிரினத் தோற்றம் பற்றிய கருத்துகள் நிரம்பிய பெட்டகமாக இந்நுால் திகழ்கிறது. உயிரைப் படைத்தது கடவுளா? விதைக்குள் மரம் -மரத்தில் விதை, பிராண சக்தி உண்டா, காற்றில் மிதக்கும் உயிரிகள், உலகத்தின் ஆதி நிலை, சோதனைக் குடுவையில் பூமி, டி.என்.ஏ.,-வின் ஆக்கிரமிப்பு, ஆதி உயிர் போன்ற, 13 தலைப்புகளில் உயிரினக் கருத்துகளைத் தாங்கி வந்துள்ளது இந்நுால்.
ஒவ்வொரு தலைப்பின் துவக்கத்திலும், பாரதியின் வசனக் கவிதை வரிகளைக் கொண்டே துவங்கப்பட்டுள்ளது. உயிரினத் தோற்றம் குறித்து, 5,000 ஆண்டுகளுக்கு முன் நிலவி வந்த கருத்துகளையும், செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான அனைத்தையும் இந்நுால் உள்ளடக்கியுள்ளது.
உலகின் மிகப் பழைய மொழி ஜெனடிக் மொழி. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றிய போது உண்டான மொழி, உலகப் பொது மொழி, எல்லா உயிரினங்களும் செல்லுக்குள் பேசிக் கொள்ளும் மவுன மொழி என்றும், இதைவிட அற்புதமான உலக மொழி ஏதும் இருக்க முடியாது என்றும், உயிர்ச் செல்களின் மொழி பற்றி மிக அழகாக ஆழமான கருத்துகளைக் கொண்டதாக இந்நுால் திகழ்கிறது. நவீன உயிரியலில் உயிரினத் தோற்றம் பற்றியக் கருத்துகளை, இந்நுால் விரிவாக எடுத்துரைத்துள்ளது.
– முனைவர் துர்கா தேவி