சங்க காலத் தமிழர்கள் வழிபட்ட தெய்வங்களுள் முதன்மையானவர் முருகப்பெருமான். குறிஞ்சி நிலத் தலைவன் குமரவேள் என்கின்றன, சங்க நுால்கள்.
நக்கீரரின் திருமுருகாற்றுப்படையே முருகன் மீது பாடப்பட்ட முதல் பாமாலை எனலாம். கந்த கடவுளை சொந்த கடவுளாய் வைத்து வழிபடுவது, ‘கவுமாரம்’ என்ற சமயம் ஆகும்.
திருவேலிறைவனை தித்திக்கும் தேனாய் திருப்புகழ் அருளிய அருணகிரியார். அவர் பாடிய திருப்புகழ் பதினாறாயிரம் எனக் கருதப்படுகிறது. ஆனால், கால வெள்ளம் அடித்துச் சென்றது போக மீதமுள்ள, 1,324 பாக்களே நமக்குக் கிட்டியுள்ளன.
அதுவும் பக்தி இலக்கியங்களிலே சந்தத்தை அறிமுகம் செய்து, ‘சந்தக்கவி’ என்று அனைவராலும் போற்றப் பெற்றவர். திருவேலிறைவனால் ஆட்கொண்டு பிரணவத்தை, ‘ஓம்’ உபதேசம் பெற்று திருப்புகழ் பாடுக என்று திருவாய் மலர, ‘முத்தைத் தருபத்தித் திருநகை...’ என்று பாடி, தலங்கள் தோறும் யாத்திரை சென்றார்.
அருணகிரி என்னும் சித்தன் ஆறுமுக கடவுளின் ஆசி பெற்றவர் என்று அறிந்த மன்னன் பிரபுட தேவராயன் மிக மதித்து மரியாதைகள் செய்து வந்தார். இந்நிலையில், அரசவையில் புகழ் பெற்றார் அருணகிரி. இதை பொறுக்காத ரத்த காளி உபாசகர் சம்பந்தாண்டான் என்பவன், சுவாமியை தர்க்கத்துக்கு அழைத்தான். நீ வணங்கும், ‘சேயோன்’ இங்கு அனைவருக்கும் காட்சி தருவானா? என, வினா எழுப்பி வாதுக்கழைத்தான்.
உடனே, அருணகிரியார் இவ்வாறு, ‘அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட அபின காளி தானாட அவளோட...’ என்று துதித்துப் பாடி, திருவருணைக் கோவில் துாணில் காட்சி தரும்படி செய்தார். அதை பெரும்பேற்றாய் கருதி, ‘பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்திருக்கும் அமுது கண்டேன்’ எனப் பாடி பரவசமடைகிறார். இவ்வாறு பல்வேறு தருணங்களில் இறைவனை தரிசனம் செய்தார்.
இரண்டாவதாக சொற்போர் வில்லிபுத்துாரார் ரோடு நிகழ்ந்தது. வில்லிபுத்துாரார் திருமுனைப்பாடியில், நாட்டுச்சனியூரில் பிறந்தவர். இவர் சந்தப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர். ஆண்டாள் பிள்ளை எனும் அரசன், வில்லிபுத்துாராரை பாரதம் பாட வேண்டினான். அவரும் பாரதம் பாடி முடித்தார். அரசன் அவரின் புலமையை மெச்சிப் பரிசில் தர முன்வந்த போது அவர், ‘என்னிடம் சந்தப்பாடல் பாடுவதில் போட்டியிட்டுத் தோற்பவர் காதை அறுக்கும் அதிகாரமும், அதோடு ஒரு தொறடும் தருக’ என்று பெற்றுக் கொண்டார்.
அவரிடம் தோற்கும் கவிஞர்களின் காதை அறுத்தார். அப்போது தான் நல்ல புலவர்களின் காது அறுபடுவதை தவிர்க்க, முருகன் அருளோடு சந்தப் போட்டியில் கலந்து, வில்லிபுத்துாராரை வென்றார்.
அப்பாடல், ‘திதத்தத் தத்தித்த திதிதாதை தாத துத்தித் தத்திதா...’ என, தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்து, அனைவராலும் போற்றப் பெற்றார். வாழ்க்கையை, ‘கருவடைந்து பத்துற்ற திங்கள்...’ பாடல் மூலம் தெரிவித்துள்ளார்.
முருகன் மேல் இயற்றிய ஒவ்வொரு திருப்புகழும் தேனாய் இனித்து, அனைத்து விதமான நோய்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் வெற்றிப் பாதையை காட்டும் வெளிச்சமாகவும் விளங்கி, ‘ஞான ஒளி’ பெறச் செய்யும் அருள்நுாலே திருப்புகழ் என்று உலகிற்கு எடுத்துரைப்பது தமிழ் அன்னைக்கும், திருவேலிறைவனுக்கும் செய்யும் மாபெரும் தொண்டே.
வாழ்க அருணகிரி
வாழ்க திருப்புகழ்
வாழ்க தமிழ்!
– த.பாலாஜி