‘உன்னுள் யுத்தம் செய்’ என்னும் நுாலின் மூலம் அறிமுகமான இரா.திருநாவுக்கரசு, ‘தன்னிலை உயர்த்து’ என்னும் தலைப்பில், இளைஞர் மணி மற்றும் ‘தினமலர், தினத்தந்தி’ நாளிதழ்களில் எழுதி வருகிறார்.
மனதை ஒருமுகப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகும் என்ற கருத்தை முத்து பேராசிரியர், யஸ்வந்த், கணேசன் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் தந்திருக்கிறார். அனுமன் போன்ற இதிகாசப் பாத்திரங்கள் மூலமும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறது இந்நுால்.
காலையில் கண் விழித்ததும், நேர்மறை எண்ணங்களை மாணவர்களுக்குத் தேவையான விதத்தில் பதிய வைக்கிறது இந்நுால். 31 தலைப்புகளில் ஆசிரியரது அனுபவங்களைக் கொண்டு, ‘என்னால் முடியும், நீ நீயாக இரு’ போன்ற பல கருத்துக்களை தாங்கி வந்துள்ளது இந்நுால்.
ஆங்காங்கே இடத்திற்கேற்றவாறு திருக்குறள்களை மேற்கோள்காட்டி, நுால் பயனுள்ளதாக விளங்குகிறது. ‘கல்லுாரி வாழ்க்கை என்பது புத்தக வாழ்க்கை அல்ல; அது ஒரு புத்தாக்க வாழ்க்கை’ என, கல்லுாரி வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என விளக்குகிறது இந்நுால்.
உன்னுள் யுத்தம் செய் என்னும் இந்நுால் தன்னோடு தானே யுத்தம் செய்து, தன் தனித் தன்மைகளை கண்டுணர்ந்து சிறந்து விளங்க முடியும் என்பதை மிக தெளிவாக படிப்போருக்கு தெளிவாக்குகிறது எனலாம்.
வாழ்க்கையின் நோக்கத்தை வரையறுத்து, அடி எடுத்து வைப்பதற்கு தேவையான அறிவுரைகளை கூறும் இந்நுால், மாணவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.
–
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்