வடகரைப் புண்ணிய பூமியின் அரசர் பெருமான் சின்னணஞ்சாத் தேவரின் அரசவைப் பெரும் புலவராக விளங்கியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இக்குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.
இலக்கிய நயம் செறிந்த பாடல்களால் ஆனது குற்றாலக் குறவஞ்சி. நாட்டின் பெருமையைக் கூற வந்தபோது கவிஞர் சொல்வார். பாவம் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் பிறநெருக்கடிகள் இங்கே இல்லை. மாம்பழம் தொங்குவதன்றி மனிதர்கள் தொங்கிக் கிடந்து வாடுவதில்லை!
மத்துகள் சுழல்வதன்றி மக்கள் வருந்தி மனம் வாடிச் சுழல்வதில்லை! கொங்கைகள் வீங்குவதன்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டும் செல்வத்தால் வீக்கம் பெறுவது இல்லை. பேரிகை புலம்புவதன்றி மக்களுள்ளே எவரும் வாய்விட்டுப் புலம்புவதில்லை. இத்தகைய வளமான நாடு! திருக்குற்றால நாதர் வாழும் நாடு! இங்கே ஓடிக்கொண்டிருக்கக் காண்பதெல்லாம் பூக்களுடன் வரும் வெள்ளப் பெருக்கமேயன்றி மக்கள் அல்லர். இங்கே, ஒடுங்கக் காண்பது எல்லாம் யோகியரின் உள்ளங்களேயன்றி, மக்கள் அல்லர்.
இங்கே வாடக் காண்பதெல்லாம் நங்கையரின் இடைகளேயன்றி மக்கள் எவரும் அல்லர். இங்கே வருந்தக் காண்பதெல்லாம் முத்துக்களை ஈன வருத்தும் சங்கினங்களேயன்றி மனிதர்கள் அல்லர். இங்கே போடக் காண்பதெல்லாம் பூமியில் வித்துக்களேயல்லாமல் பயன் அற்றவர் என எவருமே கழித்துப் போடப்படுவது இலர்.
இங்கே புலம்பக் காண்பதெல்லாம் கிண்கிணிக் கொத்துக்களேயல்லாமல் ஏழையரான மக்கள் அல்லர். இங்கே அனைவரும் தேடிக் கொண்டிருக்கக் காண்பது எல்லாம் நல்ல அறநெறிகளும் புகழுமே அல்லாமல் போலிச் செல்வங்கள் அல்ல.
உரை ஆசிரியர் புலியூர்க் கேசிகனின் தெளிவுரை அருமை!
–
எஸ்.குரு