தமிழ் இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின் எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம், செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்பிக்கை முனை என ஆறு பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன.
‘தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும் பாஸ் மார்க்?’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் செய், படுத்தபடி ஜாமீன் கேள்’ என்று கடவுளின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், படுத்த கோலத்துடன் கவிஞர் சு.முத்துவின் ஹைக்கூவை ரசிப்பதும், திருவள்ளு-வரின் பெரும்பாலான அரசியல் சிந்தனைகள், இன்றைய குடியாட்சிக் காலத்திற்கும் ஏற்புடையன என்று ஒரு கட்டுரையில் விளக்குகிறார்.
அப்பர் சுவாமிகளின் ஆளுமைப் பண்புகளுள் தலையாயது அவரது அஞ்சாமைப் பண்பு என்று விளக்குவதும், பாரதியார் போற்றும் தெய்வ வாழ்வைத் தாங்கி நிற்கும் ஆறு வலிமையான துாண்களாக அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பு, ஐம்பொறி ஆட்சி, பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்று கூறுவதும், நுாலாசிரியரின் ஆய்வுத் திறனுக்குச் சான்றுகள்.
‘சிரித்த முகத்திற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்ற இறுதிக் கட்டுரையில், கண்ணதாசன் கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நோக்கி வேகமாகக் கார் ஓட்டியவரிடம் கூறிய நகைச்சுவை, நாம் என்றும் மறக்க இயலாததாக உள்ளது. இந்நுாலைப் பல முறை படித்து, நுாலின் சிறந்த கருத்துகளைப் பின்பற்றுவது படிப்போரின் கடமையாகும்.