வால்மீகி ராமாயணத்தை அடிப்படையிலும் ராம காவியங்கள் பல புனையப்பட்ட போதிலும், கற்பனை வளத்துக்கும், கவிநயத்துக்கும் போற்றப்படும் கம்ப ராமாயணத்தின் கவித்துவக் கூறுகளை விளக்கி நுால்கள் பலவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
கடலளவு திகழும் கம்பனில் விரவிய செய்யுட்சுவைகள் அனைத்தையும் கற்று இன்புற காலம் போதாது! அவற்றுள் கையளவு கவிச்சுவைகளை எளிய நடையில் நுாலாக்கி வழங்கியிருக்கிறார் அட்சயா.
நாட்டுப் படலத்தில் யாழின் தொன்மை, தோற்றம், தொழில்கள் மற்றும் இருக்கை வகை முன்னோட்டமாகத் தந்து, கோசல நாட்டின் வளங்களையும், சமூகச்சூழல் மற்றும் மருத நில மாண்புகளையும் விளக்கியுள்ளார்.
நகரப்படலத்தில் அயோத்தி மாநகரில் செழித்தோங்கிய கவின் கலைகள், ஆடல் பாடல்கள், இயல் இசை நாடக மண்டபங்களின் வகைகள், இன்னிசைக் கருவியொலிகள் போன்றவற்றையும் வகைப்படுத்திக் காட்டும் கம்பரின் கவின்மிகு வரிகளை, எளிய நடையில் வழங்கியிருப்பது சிறப்பு.
அரசியல் படலத்தில் கூறப்படும் தசரத மன்னனின் மாண்புகள், அறிவாற்றல், அஞ்சா நெஞ்சம், ஈகைச் சிறப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் கம்பர், தசரதனின் செங்கோலாட்சியில் கோசல நாடு கலைகளில் சிறந்து, அறங்களில் செழித்த நாடாக விளங்கியதைப் பாடுகிறார்.
சரயு நதியின் சிறப்புகள், நெல் வளங்கள், நல்லொழுக்கத்தில் சிறந்த மக்கள், பல்வகை உயிரினங்களின் மகிழ்வான வாழ்வு, இயற்கைச் செழிப்புகள், இசைக் கலைகள், மாதரின் விருந்தோம்பல் போன்றவற்றை பாக்களின் மூலமாக, காணொலிக் காட்சிகள் போல் காட்டும் கம்பரின் செய்யுள்கள் விளக்கப்பட்டு உள்ளன.
அயோத்தியின் கலைச் சிறப்புகள், இயற்கைக் காட்சிகள், உவமைக் காட்சிகள் போன்றவற்றில் வெளிப்படும் ஒப்பற்ற கவிநயங்கள் நன்கு வெளிப்படுகின்றன. அயோத்தி நகரில் அறமும், கல்வியும், செல்வமும் சிறந்திருக்க, பேதையர் எவரும் இல்லாமையால் மேதை என்பாரும் எவருமிலர் எனும் கம்பனின் சொல்லாடல் நெகிழ்விக்கிறது.
பூக்கொய்ப் படலத்திலும், புனல் விளையாட்டுப் படலத்திலும் கம்பர் புனைந்த அருமையான உவமை நயங்கள், தக்க விளக்கங்களோடு முன்வைக்கப்பட்டுள்ளன.
‘கைகேயி புரிந்த குற்றத்தில் தனக்குப் பங்கு இருக்குமாயின், 48 வகைப் பாவியரின் நரகம் தனக்கு வாய்க்கட்டும்’ எனக் குமுறி, தன்னை நாடாளச் சொல்லும் ராமனிடம், ‘உரிமையில்லாத அரசை அறத்துக்கு மாறாக ஆள்வேனோ?’ என்று கேட்கும் பரதனை அறக்கடலாக நிறுவும் பாடல்களில், கம்பரின் கவித்திறனை உணர முடிகிறது.
ராம காதையில் வரும் மாபெரும் திருப்பத்துக்கு காரணமான கூனியின் பாத்திரப் படைப்பிலும் கம்பரின் புலமைச் சிறப்பு மின்னலாய் ஒளிர்வது, தக்க எடுத்துக்காட்டுகளோடு தரப்பட்டிருக்கிறது. கூனி, வலிந்து வலிந்து நற்குண மங்கை கைகேயியின் மனதில் நஞ்சு கலப்பதை, படிப்போர் பதைக்கும்படி கம்பர் சித்தரிக்கும் சொல்லழகையும் நுாலில் அறிய முடிகிறது.
அனுமன் அறிமுகம், ராமனைக் கடிந்துரைக்கும் வாலி, வில் திறனையும் தன் சொல் திறனால் சொல்லும் கம்பரின் ஆற்றல், ராமனின் திருமணத்தைக் கதிரவனே காண வந்ததாய் கூறுவதில் மேலும் மின்னுகிறது.
ராவணன் வதைப்படலத்தில், வீரம் மிக்க ராவணன் தோற்றதையே நம்ப முடியாத மண்டோதரி, இறந்து கிடக்கும் ராவணன் உடலைத் தழுவி, செவிகளில் அவனது அன்புப் பெயரை ஒலித்து உத்தமியாய் உயிர் நீத்ததை விவரிக்கும் கம்பரின் கவியாற்றல் விவரிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் கூறும் எட்டு வகை மெய்ப்பாடுகளைப் பின்பற்றி, கம்பனில் பரதன் வாயிலாக வெளிப்படும், 11 வகை மெய்ப்பாடுகளை விவரிக்கும் நுாலாசிரியர், பல்வேறு கதைப் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் பெருமிதம் மற்றும் அவல உணர்வுகள் பாடல்களில் மிளிர்வதையும் சுட்டத் தவறவில்லை.
ஆங்காங்கே திருக்குறள்களின் அடிப்படையில் கம்பர் இயற்றியிருக்கும் செய்யுட் கருத்துகள் தக்க ஒப்பாய்வுகளோடு தரப்பட்டுள்ளன. இந்நுாலில், எண்ணற்ற அச்சுப்பிழைகள் மலிந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு