இந்நுாலில், ‘பூர்ணிமா’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது யார் என ஆவலைத் துாண்டும் வகையில், 24 அத்தியாயங்கள் அமைந்துள்ளன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்தக் கிராமத்திற்கு ஒலிபெருக்கிக்காரர் வந்தாலும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அங்கே ஆஜராகி விடுவர். அப்படி ஆஜரான நுாலாசிரியர் ராஜாவுக்கு, அவ்வப்போது ஒலிபெருக்கி பெட்டியில், ‘ரெக்கார்டு’ போடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
அந்த வாய்ப்போடு, அவ்வப்போது அறிவிப்புகளை வழங்கியும் தன் பேச்சுத் திறனை பிரகடனப்படுத்தி இருக்கிறார். அந்தத் தொடக்கப் பேச்சு தான், 21ம் நுாற்றாண்டில் தமிழ் மக்கள் எல்லாருக்கும் அறிமுகமான பட்டிமன்ற பேச்சாளராக்கியுள்ளது என்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
வாழ்க்கை வரலாறாக இல்லாமல், வாழ்க்கை நிகழ்வுகளின் மீள் பார்வையாய் அமைந்துள்ளது இந்த பூர்ணிமா.காம்.
–
முகிலை ராசபாண்டியன்