தமிழ் மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் தமிழ் எழுத்துகள், வட மொழி எழுத்துகள், எண்கள், நிறங்கள், சுவைகள், வடிவங்கள், உடல் உறுப்புகள், திறன் அறியும் பயிற்சி என, 17 தலைப்புகளில் இந்த நுாலை உருவாக்கி இருக்கிறார்.
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது. குறுக்கம், அளபெடை மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டு எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன என்பதை நன்கு உணர்த்துகிறது.
தமிழ் மொழியின் அடிப்படைத் திறன்களில் முதன்மையானது கேட்டல் திறன். கேட்டல் முறையாக அமைந்தால் தான், அதைத் தொடர்ந்து நடைபெறும் பேசுதல் சிறப்பாக வெளிப்படும். கேட்டலும் பேசுதலும் தெளிவாக இருப்பின், அதைத் தொடர்ந்து படித்தல் மற்றும் எழுதுதல் திறன் வளரும்.
எழுத்து என்றவுடன் நினைவுக்கு வருபவை எழுதுகிற அல்லது படிக்கிற வரிவடிவங்களே. உண்மையில் இவ்வரிவடிவங்கள் ஒலிவடிவங்களின் குறியீடுகளாகும். இலக்கண நுாலாரும், மொழியியலாரும், ‘எழுத்து’ என்பதற்குத் தரும் முதல் விளக்கம், ‘ஒலி’ என்பதே.
தொல்காப்பியம், எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிப்பது எனும் கணக்கே மாத்திரை என்கிறது. அவ்வாறாயின் எழுத்து என்பதை ஒலி எனக் கொள்ளலாம். தொல்காப்பிய நுாற்பா, ‘எழுப்பப்படுவது ஒலிக்கப்படுவது தான் எழுத்து’ எனத் தெளிவுபடுத்துகிறது.
‘எழூஉதல்’ என்ற சொல், ‘ஒலி எழுப்புதல்’ என்னும் பொருளில் வருகிறது. ஆகவே, எழுப்பப்படும் ஒலியே எழுத்து என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். முதல் எழுத்தில் துவங்கி உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய்யெழுத்துக்கள், ஒலி வாய்ப்பாடு, ஒலிச்சொற்கள் என தமிழ் மொழியின் அடிப்படைகளை இந்நுால் விளக்குகிறது.
அனைத்து பிரிவு குழந்தைகளுக்கும் தமிழ் எழுத்துத்திறன், படித்தல் திறன், பேச்சுத்திறன் அனைத்தையும் எளிமையான பயிற்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுால் மிகுந்த பயனளிக்கும்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்