பர்மாவில், இரண்டாம் உலகப் போர் அனுபவத்துடன் துவங்குகிறது புத்தகம். வாழ்க்கையை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. போரற்ற, நோயற்ற நிலை நோக்கி நகர துாண்டும் தொகுப்பு நுால்.
புத்தகத்திலிருந்து... பர்மா நாட்டில், மீங்கேயில், 1940ல் வசித்தோம். தமிழரை, ‘கள்ளா’ என்று அழைப்பர். பள்ளியில், 5ம் வகுப்பில் இருந்தேன். பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்தன.
தலை தெறிக்க ஓடினோம். 40 ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. அன்று மூடிய பள்ளி திறக்கவேயில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பர்மாவை விட்டு வெளியேற கட்டளையிட்டனர். பொருட்களை வந்த விலைக்கு விற்று மாட்டு வண்டியில் புறப்பட்டோம். மூன்று நாளுக்கு பின், இரவை கழித்த இடம் சுடுகாடு.
வண்டியை விடுத்து, 700 மைல் நடந்து, யோமா என்ற ஊரை அடைந்தோம். எனக்கு அம்மை நோய் தொற்றியது. எங்கள் பொருட்களை சயாம் நாட்டு வீரர்கள் கொள்ளையடித்தனர். ஜப்பான் வீரர்கள், ‘காந்தி நாட்டைச் சேர்ந்தவர்களா’ என கேட்டு படகு ஏற்பாடு செய்தனர். நோய் கண்டவர்களை, படகில் ஏற்ற மறுத்து விட்டனர்.
என் தந்தை, ஒரு புத்த பிட்சுவிடம் முறையிட, படகின் அடியில் என்னைபடுக்க வைத்தனர். நீண்ட பயணத்துக்கு பின், அலோ ன் என்ற ஊரில் ரயில் கூட்ஸ் பெட்டியில் தங்கினோம். என் நோய் குறைந்து, என் தம்பியர் இருவருக்கு தொற்றி ஒரே நாள் இடைவெளியில் இறந்தனர். போமபஸ்தி என்ற ஊருக்கு போனோம்.
சுகாதாரக் குறைவால் காலரா, பிளேக் தொற்றுகள் பரவி பலர் மாண்டனர். என் படுக்கை அருகே எலி செத்து விழுந்தது. காய்ச்சலுடன் இடது அக்குளில் கட்டி தோன்றியது. உடலை பிராண்டி தேய்த்து, மத்தை தீக்குள் வைத்து சூடு போட்டார் அம்மா. நான் பிழைத்துக் கொண்டேன். இவ்வாறு, திகில் கட்டுரைகளின் தொகுப்பு.
– அமுதன்