எளிமையாக உடல் நலன் பேணுவது குறித்து அறிவியல் ரீதியாக சுவாரசியமாக விளக்கும் நுால். கர்நாடகாவை சேர்ந்த டாக்டர், ஆங்கில மொழியில் எழுதியதை, தமிழாக்கம் செய்துள்ளார் நிழல்வண்ணன். புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது. அன்றாட வாழ்வனுபவம் சார்ந்து அறிவுரைக்கிறது.
‘சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வர்’ என்று துவங்கி, 34 தலைப்புகளில் உடல், உள்ள நலம் பேண வேண்டியதன் அவசியம் விவரிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிக்கத் தக்க அறிவுரைகள். வியாபாரத்துக்காக, நலனை பயன்படுத்தும் அரசியலும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுாலில் இருந்து...
சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வர். மனம் விட்டு சிரிக்கும்போது, வலி, துயரங்களைக் குறைக்க தேவையான, ‘என்டார்பின்’ உடலில் அதிகம் சுரப்பதாக அறிவியல் கூறுகிறது. இந்த சுரப்பு, நரம்பு வழியாக மூளைக்கு செய்திகளை எடுத்து செல்கிறது.
அட்ரினால் சுரப்புகள் சில உடலுக்கு நன்மையும், சில தீய விளைவையும் தரும். கோபப்படும் போது, சுரப்பது தீய விளைவைத் தரும்; சிரிக்கும் போது, ‘கேட்டகோலமைன்’ சுரந்து நன்மை தருகிறது. மனம் விட்டு சிரிப்பது ஆரோக்கியத்துக்கு வரம். ரசித்து சிரிப்பவருக்கே இது பொருந்தும். பிறர் துன்பத்தில் சிரிப்பவர்களுக்கு பயன் ஏதும் இல்லை.
ஆப்ரிக்காவில் வசிக்கும் ஒரு பழங்குடி இனத்தின் பழக்க வழக்கம் வினோதமானது. குழுவில் யாராவது முதலை வாயில் சிக்கிக் கொண்டால் சிரிப்பார்களாம். நாகரிக சமூகத்தில் வாழும் நாம் கூட, பிறர் துன்பம் கண்டு சிரிக்கத்தானே செய்கிறோம். இந்த மாதிரி எதிர்மறை உணர்வு, மாரடைப்பு உட்பட பல நோய்களுக்கு காரணமாகிவிடும்.
இவ்வாறு, நுாலில் கருத்துகள் நிரம்பியுள்ளன. உடல், உள்ள நலத்துடன் வாழ்வதற்கு வழிகாட்டும் நுால்.
– மலர் அமுதன்