தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் இயக்கம், வைக்கத்தில் நடத்திய போராட்ட வரலாற்றை, தெளிவாக பதிவு செய்துள்ள நுால். நான்கு இயல்களாக எழுதப்பட்டுள்ளது. கேரளா, வைக்கம் கோவிலை அணுகும் சாலைகளை பயன்படுத்த, புலையர், ஈழவர் இன மக்களுக்கு தடையிருந்தது. அதை விலக்க கோரி, 1924ல் துவங்கி நடந்த போராட்டத்தின் வரலாறு.
போராட்ட களத்தில் காந்தி, வைதீகர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை முக்கிய பகுதி. கிட்டத்தட்ட, 32 பக்கங்களில் உரையாடல் வடிவில் இடம்பெற்றுள்ளது. சகிப்பும், நாவன்மையும், குறிக்கோள் நுட்பமும் காந்தியின் உரையில் வெளிப்படுகிறது. பொது பிரச்னையை அணுகுவதற்கான நடைமுறை பாடமாக கொள்ளலாம்.
உரையாடலின் ஒரு பகுதி –
காந்தி: ஒரு தவறை பல நுாற்றாண்டுகள் செய்து வருவதால், அது, சரியாகிவிட்டது என்று கூறுகிறீர்கள், அப்படித்தானே...
நம்பியாத்ரி: நாங்கள் செய்து வருவது தவறு என்று நம்புவதற்கு காரணம் ஏதுமில்லை.
காந்தி: உங்களைப் போலவே, எதிர்தரப்பினரும், உங்களை, திருடர்களை விட, கொள்ளைக்காரர்களை விட, கீழானவர்களாக கருதினால் எவர் கருதுவது சரி என்று யார் தீர்மானிப்பது...
இப்படி, உரையாடல் அமைந்துள்ளது.
அன்றாட இதழ் செய்திகளைக் கொண்டு முதல் இயல் தொகுக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் அரசு நடவடிக்கை, உத்தரவுகள், உளவுத்துறை குறிப்புகள், போராடிய தலைவர்களின் பேச்சு, அறிக்கை, கடிதம் என, ஆவணங்கள் துணை கொண்டு, எளிமையாக எழுதப்பட்டுள்ளது. தொகுப்பாசிரியரின் உழைப்பு, துல்லிய தகவல்களால் வெளிப்படுகிறது.
போராட்டத்தில் பெரும்பாலும் தமிழர்கள் தான் பங்கேற்றுள்ளனர். அப்போது, இந்திய தேசிய காங்கிரசில் தமிழக தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி பெரியார் தலைமை ஏற்று வழிநடத்திய விபரங்கள் எழுதப்பட்டு உள்ளன.
களத்தில் நின்ற பெண்கள், தொண்டர்கள், நிதி உதவி என, பலதும் பதிவாகி உள்ளது. ஒரு முக்கிய மாற்ற செயல்பாட்டை தெளிவாக பேசும், சமூக வரலாற்று நுால்.
– மலர் அமுதன்