வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும் நுாலான, தொல்காப்பியம் தோன்றிவிட்டது. வடவேங்கடம் முதல், தென்குமரிக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கை இணைத்து, இலக்கணம் கண்டவர் தொல்காப்பியர்.
இந்த நுாலுக்கு, இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையர் உட்பட பலர் உரை எழுதியுள்ளனர். அதில், இளம்பூரணரின் உரையைத் தழுவி புலியூர்க்கேசிகன் தெளிவான உரை எழுதி உள்ளார். அது அழகிய பதிப்பாக வெளிவந்துள்ளது.
இந்த நுாலில், பனம்பாரனாரின் பாயிரத்தால் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம், 483 நுாற்பாக்களில் எழுத்தின் பிறப்பு, புணர்ச்சி, குற்றியலுகரம் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சொல்லதிகாரம், 464 நுாற்பாக்களில் திணை, பால், இடம், எண், பெயர், வினை, இடை, உரி, எச்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. பொருளதிகாரம், 656 நுாற்பாக்களில் வாழ்வு இலக்கணத்துக்கு விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
காதல் பேசும் அகத்திணை, வீரம் பேசும் புறத்திணை, களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் பற்றி எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தில் செய்யுளியலும், அணி இலக்கணத்தில் உவமயியலும், தமிழர் மரபுகளைக் கூறும் மரபியலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
மனிதனின் பகுத்தறிவு பற்றியும், மற்ற உயிரினங்கள் பற்றி மரபியல் நோக்கிலும் தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஓரறிவு உயிரினமான புல், மரம்; ஈரறிவுள்ள சங்கு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல்; மூவறிவுள்ள கறையான், எறும்பு; நான்கறிவுள்ள நண்டு, வண்டு; ஐந்தறிவுள்ள பறவை, விலங்கு என்ற விளக்கம் வியப்பின் உச்சம்.
– முனைவர் மா.கி.ரமணன்