தமிழ்ச் சிறுகதைகளையும் காலந்தோறும் தொகுத்து வெளியிடுகிறது சாகித்ய அகாடமி. அந்த வரிசையில், இந்த நுால் நான்காம் தொகுப்பு. பல பகுதிகள் சார்ந்த, 31 கதைகள் இடம் பெற்றுள்ளன. நுாலின் நிறைவுப் பகுதியில், கதாசிரியர்கள் பற்றி சிறுகுறிப்பும் உள்ளது. முன்னுரையில், தமிழ் உரைநடை இலக்கிய வரலாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.
‘திற’ என்ற சிறுகதையுடன் துவங்கி, சிதைகோழியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் அடையாளப்படுத்துகின்றன. போகி பண்டிகை அன்று பள்ளிக்கு லீவு போட்ட சிறுவனை, வகுப்புக்கு வெளியே நிறுத்தியதற்காகப் பொங்கி எழுந்த பெற்றோர் பற்றிச் சொல்லும் கதை, உயர்ந்த மனிதர்களின் அறமற்ற செயலை உணர்த்தும் கதை, எதற்கும் கோபப்படும் வள்ளம் ஓட்டியின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் கதை என, வகை மாதிரியாக அமைந்துள்ளன. சிறுகதை பிரியர்களின் பார்வையை விரிவடையச் செய்யும் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்