தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஒரு கூட்டம், ஹிந்து தெய்வங்கள், வழிபாடுகள் குறித்து அவதுாறு பரப்ப மற்றொரு கூட்டம் என, பல்முனை தாக்குதலை ஹிந்து மதம் சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்தணர்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள், விநாயகர் வழிபாடு பின்னாளில் வந்தது, முருகன் குறிஞ்சி நில தலைவன், அவனை தெய்வமாக்கி ஹிந்து மதம்
தமிழர்களை ஏமாற்றுகிறது என்றெல்லாம் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவை அனைத்தும் தவறானவை என, ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இந்நுால். ‘தென்குமரி, வடபெருங்கடல்...’ என துவங்கும் புறநானுாறு பாடலை ஆதாரமாக கொண்டு பாரதத்தின் எல்லைகளை நுாலாசிரியர் வரையறுக்கிறார்.
தமிழகத்தில் வேதியர் இருந்ததை கவுதமானாரின் பதிற்றுப்பத்து பாடல் மூலம் விளக்குகிறார். ‘சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்மென்..’ என்ற பாடலில், தமிழகத்தில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் கற்றுணர்ந்த முனிவர்கள் வளர்த்த வேள்விப்புகை சிறப்பு மிக்க சேரநாடு முழுதும் இருந்தது என்று ஆதாரம் காட்டுகிறார். வேதமும் வேள்வியும் தமிழகத்தில் உயர்ந்திருந்தன, அந்தணர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாக, பதிற்றுப்பத்து பாடலை காட்டுகிறார்.
‘ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று’ என்ற பாடலில், அந்தணர்களின் ஆறு கடமைகள் கூறப்பட்டுள்ளன.
வேதங்களை கற்று ஓதுவது, அதை பிறருக்கு கற்பித்து ஓதச் செய்தல், வேள்வி செய்தல், வேள்வியை பிறர் செய்ய வழிகாட்டுதல், தகுதியுடையோருக்கு தானம் செய்தல், தகுதியுடையவர்களிடமிருந்து தானம் பெறுதல் ஆகிய கடமைகள் அந்தணருக்கானவை என, கூறுகிறார் புலவர். அத்தகைய அந்தணர் கூறும் தர்மப்படி அரசன் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தணர்கள் கைபர்போலன் கணவாய் வழியே வந்தவர்கள் என்ற பொய் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்து மதத்தின் ஆழம், தமிழ் புலவர்களின் தெய்வ நம்பிக்கை குறித்து தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகம்.