கல்வெட்டு, செப்பேடு, நாணயங்கள், இலக்கியம், செவிவழிச் செய்திகளை ஆய்ந்து வரலாறு எழுதப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா பற்றிய தென் இந்திய வரலாறு சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறை இருந்தது. அதை போக்கும் வகையில், இலங்கை நாட்டையும் இணைத்து, விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நுால்.
கி.மு., 300 முதல், கி.பி., 1600 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை எழுதியுள்ளார். மன்னர்களின் வீரம், கொடை, காதல், மக்களின் பொருளாதார நிலை, பண்பாட்டு வளம், இலக்கிய வளம் பற்றி விரிவாக எழுதப்பட்டு உள்ளது. விஜயநகர அரசர்கள் வெளியிட்ட பகோடா நாணயங்களில், கன்னடமும், நாகரி மொழியும் இருந்தன. பாமினி சுல்தான்கள் ஆட்சியில், மதுரையில் செப்பு, வெள்ளி, பவுன் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
தென்னிந்தியா பற்றி மெகத்தனீசு எழுதிய குறிப்புகள், சீனருடன், காஞ்சி பல்லவர்கள் கொண்ட தொடர்பு போன்றவையும் பேசப்பட்டுள்ளது. பெல்லாரி, மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களின் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்த கற்கோடரிகள், கற்கத்திகள், கல்வாச்சிகள், தமிழகத்தில் ஆதிச்சநல்லுார் அகழ்வாய்வில் கிடைத்தவற்றுடன் ஒப்பு நோக்கத்தக்கன.
ஆதிகாலம் தொட்டு, முருகனை தமிழர்கள் வழிபட்டு வந்தமைக்கு இரும்பு வேல், பித்தளை வேல் கண்டெடுக்கப்பட்டுள்ளதை, ஆதிச்சநல்லுார் அகழ்வு ஆராய்ச்சியை முன்வைத்து கூறுகிறது. பாண்டிய நாட்டின் பட்டு, முத்து பற்றி கவுடில்யர் சிறப்பாக எழுதியுள்ளார். சங்க காலத்திலும், பின்னரும் மூவேந்தர் ஆட்சி இருந்தது. கி.பி., 75 வரை ரோம நாட்டுக்கும், தமிழகத்துக்கும் வர்த்தகம் நடந்த விபரங்களை சான்றுகளுடன் விளக்கி உள்ளார்.
விஜய நகரப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும், முகமதியர், போர்ச்சுக்கீசியர் தாக்குதலும் படிப்பினைகள் தருகின்றன. இலக்கிய, கலை வளர்ச்சி பற்றியும் தொடர்பு படுத்தும் வரலாற்று நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்