தமிழில் வெளியான, 140 சினிமா விமர்சனங்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.
தமிழின் முதல் சினிமா காளிதாஸ் உட்பட, 70 படங்களின் தடயங்கள் இன்று கிடைக்கவில்லை. அவை குறித்த இதழ்களில் வந்த விமர்சனம் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த காலத்திய தமிழ் மொழி நடை, விமர்சன அணுகுமுறையை அறிய முடிகிறது.
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், குயிலன் உட்பட, 11 பேர் விமர்சனங்களை எழுதியுள்ளனர். ரசிகர்களால் விரும்பப்பட்ட பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்றவற்றில், குறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஈழகேசரி மலரில், சிந்தாமணி என்ற படம் பற்றி, 1938ல் எழுதியுள்ளார் புதுமைப்பித்தன். அதில், ‘கதாநாயகியாக வரும் ஸ்ரீமதி அசுவத்தாமா கன்னட பாஷைக்காரி. ஆனால், சிந்தாமணியாக நடிக்கும்போது பேசிய மழலைத்தமிழ் விரும்பி அனுபவிக்கப்பட்டது. தமிழ் சினிமா கொட்டகைகளில், இதுவரை அதிக நாட்கள் ஓடிய படம்...’ என, குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘தமிழ்ப் படங்களில் பொருந்தாத இடத்தில் ஹாஸ்யக் காட்சிகளை வைப்பது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. அடித்தட்டு சமூக வசூலைப் பெறலாம் என்ற பட முதலாளிகள் எண்ணம் பிழையானது. மேன்மையானதை எடுத்துக் காட்டினால், சினிமாக்கலை உயரும்...’ என்கிறார்.
தமிழன் குரல் இதழில், ரத்தக்கண்ணீர் படம் குறித்து, ‘ஒரு ஆண், தாசிலோலனைத் திருத்த முயல வேண்டுமே ஒழிய, பெண்ணை விபசாரம் செய்யத் துாண்டுவது அறிவுடைமையாகாது. சொந்த அனுபவத்தைக் கொண்டு, எல்லாம் பிசினஸ் கட்சிகள் என்ற முடிவுக்கு வருகிறார் எம்.ஆர்.ராதா. இந்த தவறை பட அதிபதி எப்படித்தான் அனுமதித்தாரோ... ராதாவின் சுயமொழி இல்லாதிருந்தால், படத்தின் தரம் உயர்ந்திருக்கும்...’ என, எழுதப்பட்டுள்ளது. ஆய்வாளர்களுக்கு உதவும் சுவாரசிய நுால்.
– டி.எஸ்.ராயன்