கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது.
மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து...
உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் இருக்கலாம். ஒரு மனித உடலில் செல்களின் எண்ணிக்கை, 30 டிரிலியன் என்றால், அதில் வசிக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, 39 டிரிலியனாக இருக்கலாம். 1 டிரிலியன் என்பது 100 ஆயிரம் கோடி.
ஆள் பாதி, பாக்டீரியா பாதியாக உள்ளது உடல். இதில், செல் அதிகமா, பாக்டீரியா அதிகமா என்பது முக்கியமல்ல. மனிதன், தனி உயிரினம் அல்ல என்பதே முக்கியம். இது தான் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. பல உயிரினங்கள் சேர்ந்த கூட்டணியை, ‘நான்’ என்ற ஓர் உணர்வு, ஒருங்கிணைத்து வழி நடத்துகிறது.
ஒன்றை, 500 மடங்காக உருப்பெருக்கும் பூதக்கண்ணாடியைப் பயன்படுத்தி, தோலில் ஒரு பகுதியை உற்று நோக்கினால், திராட்சைக் கொத்து போல... குழாய்ப் புட்டு போல... முந்திரிப் பருப்பு போல... பற்பல வடிவங்களில் கொத்துக் கொத்தாக காணலாம்.
குண்டூசி தலையில், மில்லியன் பாக்டீரியாக்களை குரூப் டான்ஸ் ஆட வைக்க முடியும். எண்ணிக்கையில் அதிகமாக தெரிந்தாலும், ஒரு மனித உடலில், அவற்றின் எடை, அரை கிலோ மட்டுமே.
மைக்ரஸ்கோப் உதவியின்றி, பாக்டீரியாவை பார்க்க முடியாது. ஆனால், அது ஏற்படுத்தும் பக்க விளைவுகளை உணர முடியும். தும்மல், இருமல் எல்லாம் பாக்டீரியா ஏற்படுத்தும் விளைவுகள் தான். இவ்வாறு, புத்தகத்தில் உள்ளது. சுவாரசியமான அறிவியல் உண்மைகளையும், அவை கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று தொடர்பு பற்றியும் பேசுகிறது இந்த புத்தகம்.
– அமுதன்