உலகம் முழுதும் வழிபாடுகள் பல வடிவில் இருப்பினும், நோக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்திய நாட்டிலும், வாழ்வியல் சூழலுக்கேற்ப வழிபாட்டில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழினம் சார்ந்த வழிபாட்டு நெறிகளின் மீதான ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் வழக்காற்றுக் கதைகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் மலைமகள், கொற்றவை, பழையோள் எனப் பெண் தெய்வங்களை வழிபடப்பட்டனர். கொற்றவை வழிபாட்டிலிருந்து கிளைத்தவையே பிற்பாடு வந்த பெண் தெய்வ வழிபாடுகள் என்றும், கொற்றவையே இந்நாளில் துர்க்கையாக வணங்கப்படுகிறது என்பர்.
புதுச்சேரியில் பல நுாற்றாண்டுகளாக வழிபடப்படும் நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றி கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால் இது. சிறு தெய்வ விபரங்கள், பெயர்க் காரணம், அமைவிடம், கோவில் அமைப்பு, வழிபாட்டு முறை போன்ற தகவல்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு முன், பெண்வழிச் சமூகமே மனித இனத்தை நடத்தியதாக தெரிகிறது. நாளடைவில் ஆணாதிக்கம் மேலோங்கிய நிலையில் ஆண் தெய்வங்கள் முன்னிறுத்தப்பட்டதை அறிய முடிகிறது. சிற்பக்கலை தோன்றிய பின், சிலை வழிபாடு துவங்கியது.
புதுச்சேரி கோவில்களில், 38 பெண் தெய்வங்கள் இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இது, ஆண் தெய்வங்களுக்கு இணையாக உள்ளது. வழக்காற்றுக் கதைகளும், வழக்கங்களும் தரப்பட்டுள்ளன. நோன்பு, படையல், கூழ் வார்த்தல், பொங்கலிடுதல், குடமுழுக்கு, திருவிழா நடைமுறை போன்றவையும் விவரிக்கப்பட்டுள்ளன.
தானியம் சார்ந்த சடங்கு, நேர்த்திக்கடன், தெருக்கூத்து போன்றவையும், நகரமயமாக்கலால் நாட்டுப்புற கோவில்கள், பெருந்தெய்வக் கோவில்களாக மாற்றப்பட்டதும் தரப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கிலும், அறிதல் நோக்கிலும் படிக்க உகந்த நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு