மத்திய கிழக்கு நாடான சிரியா அரசில், வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியவர் நிசார் கப்பானி. அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். அரபு மொழியிலிருந்து, நேரடியாக தமிழுக்கு பெயர்த்துள்ளார், பேராசிரியர் ஜாகிர் ஹுசைன். தொகுப்பில், 30 கவிதைகள் உள்ளன.
சட்டம் பயின்ற கப்பானி, பெண்களின் உரிமைக்காக வாதாடியவர். மக்கள் மனதில் படர்ந்திருந்த பயத்தை, துடைத்து எறிய கவிதையை பயன்படுத்தியவர். எளிமையும், ஈர்ப்பும் மிக்க கவிதைகளுக்குள் பிரவேசிக்கும் அனுபவம் இனிமையானது. மன எழுச்சியை உருவாக்க வல்லது.
இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள், காதல், பெண் உரிமை பற்றி தான் அதிகமாக பேசுகின்றன. கொடிய போரின் தாக்கமும், மறைமுக போரின் அழுத்தமும் விவகாரமாய் ஊடே பாய்கின்றன.
‘எப்படி வேண்டுமானாலும் ஆகு... கடும் வலியாகக் கூட இரு... வலிக்கும் போது தான் இறைவனாக மாறுவேன்...’ என, ஒரு தவமாக பிரவாகிக்கிறது காதல். சொற்களாய் மட்டும் இல்லாமல், உணர்வாகவும், நம்பிக்கையாகவும் பாய்ந்து மனதில் சுழல்கின்றன.
‘காதலும் பெட்ரோலும்’ என்ற தலைப்பில் நீண்ட கவிதை ஒன்று உள்ளது.
அது, ‘மற்றவர்கள் போல், உன் தோழியரில் நானும் ஒருத்தி அல்ல...’ என துவங்குகிறது.
‘உன்னிடம் பெட்ரோல் இருக்கிறது... அதை உன் தோழியர் பாதங்களில் ஊற்று... பாரீஸ் இரவுக் குகைகள், உன் பண்புகளை கொலை செய்துவிட்டன... தியாகிகளின் சாம்பலையும் விற்றுவிட்டாய் நீ...’ என கொந்தளிக்கிறது.
அரேபிய சமூகத்தின் கட்டமைப்பு, அரசியல், பண்பாட்டை உள்வாங்கிய படைப்புகளாக உள்ளன. உவமை, உருவகம், சிலேடை, குறியீடுகள் எல்லாம் நிறைந்து வாசிப்பை சுவாரஸ்யப் படுத்துகின்றன. பண்பாட்டை அதிர வைக்கும் கேள்விகளையும் எழுப்புகின்றன. மானுடத்தின் உன்னதமான காதல், உரிமை போன்ற உயர்ந்த பண்புகளை தேடும் மனநிலையை, கவிதை பரப்பு முழுதிலும் தரிசிக்கலாம்.
– அமுதன்