புதுச்சேரியை, ‘பிரஞ்சு கலாசாரத்தின் ஜன்னல்’ என, இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார். புதுச்சேரி நகர வரலாற்றுடன், ஐரோப்பாவிலிருந்து புதுச்சேரியில் குடியேறிய, பிரஞ்சுக்காரர்களின் வரலாற்றையும் பதிவு செய்துள்ளது இந்நுால். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், டேனிஷ்காரர், பிரஞ்சுக்காரர் என, மாறி மாறி, 16-ம் நுாற்றாண்டு முதல் புதுச்சேரியில் வாணிகம் செய்ய முயன்றனர். அவர்களின் வரலாற்றையும், அதில் நிலைத்து, ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர் வரலாற்றையும் தெளிவுபடுத்துகிறது.
ஐரோப்பியர் வருகைக்கு முன், புதுச்சேரி நகரம் இருந்ததா... அதன் பெயர் என்ன... பழைய பெயர், ‘பொதுக்கா’ எனப்படுவது சரியா... புதுச்சேரி என்ற பெயர் சூட்டியது எப்படி... போன்ற வினாக்களுக்கு, தெளிவான ஆதாரங்களுடன் விடை அளிக்கிறார் நுாலாசிரியர். ஒழுங்கு அமைப்புள்ள வீதியால், வரலாற்றில் புகழ்பெற்றது புதுச்சேரி. அதன் கோழிமுட்டை வடிவிலான நகரமைப்பும், நேர்க்கோட்டில் அமைந்த தெருக்களும், இந்திய நிலப்பரப்பில், முதன் முதலாகத் திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டது.
அதை வடிவமைத்தது யார்... புதுச்சேரி நகரம் உருவாகியது யாரால்... போன்ற கேள்விகளுக்கு முறையான சான்றுகளுடன் விளக்கம் உள்ளது. உள்ளூர் வரலாறு எழுதுபவர்களுக்கு முன்னுதாரணமாக திகிழ்கிறது. ‘இவ்வளவு விரிவாகப் புதுச்சேரி நகரத் தெருக்கள் பற்றி யாரும் எழுதியதில்லை...’ என வாழ்த்தியுள்ளார் முன்னாள் நீதிபதி தாவீதன்னுசாமி. புதுச்சேரி நகரத்தில் அனைத்துத் தெருக்களையும், அவற்றின் பின்னணியில் வரலாற்றையும் விரிவாக விளக்கிச் சொல்கிறது.
வரலாற்றின் மீதான ஆர்வமும், அயராத உழைப்பும், நுாலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. புத்தகம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. தெளிவான அச்சு வாசிக்க துாண்டுகிறது. உரிய பகுதிகளில் வரைபடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கனம் மிக்க வரலாற்றை, எளிமையான மொழிநடையால் உள்ளத்தில் பதிய வைக்க முயற்சிக்கிறார். பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்று தகவல் பெட்டகம்.
– ராமலிங்கம்