எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்ற கேள்வி எழும்போது, விடை தேடி புத்தகங்களை படிக்கிறோம். நல்ல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில் மெய்ஞானத்தை விரிவுபடுத்துகிறது. ஆனாலும், முழு ஞானமும் கிடைக்கப் பெறுவதில்லை.
தேடிப் படிக்க முற்படுவோருக்கு இந்த புத்தகம் மிகப் பெரிய படிப்புரை. வள்ளுவர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், திருமூலர் மற்றும் அப்பர் சுவாமிகளை ஆராய்ந்து ஒப்பிடுவது சாதாரண காரியமல்ல. முற்றும் துறந்த முனிவராலும் வெல்ல முடியாத விதியை நல்வினையால் மாற்ற முயற்சிக்கலாம் என, கடைத்தேற வழி தேடித் தந்திருக்கிறார்.
‘மீண்டும் ஒரு பிறவியா... போதும்டா சாமி...’ என நினைத்தாலும், பாவங்கள் மூட்டையாகச் சேர்ந்து, அடுத்த பிறவியைக் கொடுக்கின்றன என்றும், பாவம் செய்வதைத் தவிர்க்க, திருமுறைகளை படியுங்கள் என்றும் சொல்லாமல் சொல்கிறது இந்தப் புத்தகம்.
– மீனா குமாரி