கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால்.
மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன.
ஆலக்கோவில் என்பது ஆல மரத்தால் ஆனது இல்லை. ஆனைக்கோவில், துாங்கானை மாடக்கோவில் என ஆய்ந்து சொல்கின்றனர். தொண்டை நாட்டில், 36 துாங்கானை மாடக் கோவில்களை வரிசைப்படுத்தியுள்ளனர்.
புலிப்புரக் கோவிலை, வடமொழியில் வியாக்ரபுரீசுவரர் என ஆக்கினர். ஆனால், வேங்கை மர நிழலில் சிவன் உள்ளார். வேங்கை மரத்தை, வேங்கைப் புலியாக்கி விட்டனர் என்று ஆராய்ந்து வெளிப்படும் பாங்கு பாராட்டுக்குரியது.
கோவிலையும், மூர்த்தங்களையும் நேரில் பார்ப்பதுபோல் படங்களுடன் விளக்கியுள்ளது சிறப்பாக உள்ளது. கல் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் ஒன்றுவிடாமல் ஆவணப்படுத்தி உள்ளனர். இது போன்று எல்லா கோவில்களையும் ஆவணப்படுத்தினால், அடுத்த தலைமுறை அறிந்து போற்றும்.
– முனைவர் மா.கி.ரமணன்