கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது.
அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா... என் கூட்டுக்காரா... ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம்.
அழகனை, ஆன்ம ஞானம் தருபவனை, அலங்கார பூஷிதனை நேசிக்க கோவிலுக்குச் செல்லும்நம் மனம்... அழகற்ற, புற உணர்வற்ற, புறந்துாய்மையற்ற ஒருவன் மேல் பரிதாபம் கொள்கிறது எனில், நம் மனமும் ஒரு கோவில் தான்.
அன்பும், ஆன்மிகமும் சாகவில்லை... ஒன்றையொன்று சார்ந்து இருக்கிறது என்பதை தலைமை அர்ச்சகர் மனதின் வாயிலாக உணர வைக்கிறது. கிஸ்னா... அவனை கஷ்டப்படுத்தாதே... என்று நம் மனமும் துடிக்கிறது. ஆண்டவன் மேல் காட்டும் அன்பை விட, அடியார்கள் மேல் காட்டும் அன்பு உன்னதம் என்பதை இக்கதை உணர்த்துகிறது. குறைவு என்பதற்கு சோகை என்றும் சொல்லலாம் போலும். அன்பு குறைவை அன்பு சோகை என்று அழகாக விளக்குகிறார்.
கவிஞனும், கைதியும் ஆழ்வார் பாசுரத்திற்குள் ஒன்றி தங்களை தொலைத்த கதை இன்னும் நம் மனதை மேம்பட வைக்கிறது. இடையில் வைக்கவிடாமல் என்னை முழுவதுமாக படித்து முடி என்று துரத்திக் கொண்டிருக்கிறது ஆசிரியரின் கைவண்ணம். புத்தகத்தை படிக்கும் போது நம் மனமும் பாசுரங்களால் நிரம்பி வழியும்.
– எம்.எம்.ஜெ.,