பண்டைய தமிழர் ஆட்சிக் காலத்தில் கட்டடக் கலையும் அழகுணர்ச்சியும் சிறந்து விளங்கியிருக்கின்றன என்பதை சங்க கால இலக்கியங்கள் இயம்புகின்றன. குறிப்பாகக் கோட்டைகளும், மதில்களும் முடி மன்னர்களின் பெருமைகளாகக் கருதப்பட்டன.
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது, எதிரி மன்னரின் மதிலை அழிப்பதே அன்று வெற்றியின் உச்சமாகக் கருதப்பட்டது. பிற்காலத்தில் வணிகத்திற்கான கோட்டைகளும், காதல் கோட்டைகளும் கூட கட்டப்பட்டன.
செஞ்சி கோட்டை, வேலுார் கோட்டை, தரங்கம்பாடி கோட்டை, சதுரங்கப்பட்டினம் கோட்டை, நாமக்கல் கோட்டை, உதயகிரி கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் கோட்டை, ஆத்துார் கோட்டை, மனோரா கோட்டை மற்றும் காதல் கோட்டைகளான ஓசூர் மாளிகை, மகாதேவப்பட்டினம் மாளிகை ஆகியவற்றின் விரிவான விபரங்கள், அரிய படங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றுத் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.
வரலாற்றில் கம்பீரமாக நின்ற அந்தக் கோட்டைகளில் பலவும் உருக்குலைந்து சிதைந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு கோட்டைக்குப் பின்னணியிலும் நெடிய வரலாறும், பெருமிதங்களும் இருப்பதை அறிய முடிகிறது. கோட்டைகளின் கட்டமைப்புகள், தொழில் நுட்பங்கள், உள்ளரங்க அமைப்புகள், மதில்களின் கட்டுமானங்கள், பல்வேறு நுழைவாயில்கள், சுரங்கப் பாதைகள் அனைத்தும் கற்பனை வளத்தை கண்முன் நிறுத்துகின்றன.
கோட்டைகளுக்குள் அமைந்த அகன்ற அகழிகள், மண மண்டபம், வெடி மருந்துக் கிடங்கு, தானியக் களஞ்சியம்போன்றவை ஆற்றல்களைத் துலக்கமாகப் பிரதிபலிக்கின்றன. கோட்டைகள் கட்டப்பட்ட ஆண்டுகள், வரலாற்றுப் பின்னணிகள், படையெடுப்புகளால் கைமாறிய தகவல்கள், பேரழிவுகளுடன் சுவையான சம்பவங்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. வரலாற்றை அறிய விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு