தமிழில் வெளிவந்த, ‘மணப்பேறும் மகப்பேறும்’ புத்தகத்தை எழுதிய புகழ் பெற்ற மருத்துவர் ஞானசவுந்தரி. அவரது தன் வரலாற்று நுால். நெகழ்வும், அறமும் கலந்த படைப்பாக உள்ளது.
வாழ்க்கை நிகழ்வுகளை, 20 இயல்களாக பிரித்து எழுதியுள்ளார். சம்பவங்களுடன் அறத்தை, நுட்பமாக பொருத்தி காட்டியுள்ளார். தமிழ் இலக்கிய மேற்கோள்களை இணைத்து, இலக்கியச் சுவையையும் கலந்துள்ளார்.
சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டி, அதன் ஊடே மருத்துவ அனுபவத்தை விவரித்துள்ளார். ஒரு மகப்பேறு மருத்துவரின் பொறுப்பும், கடமையும் உன்னதமாக வெளிப்பட்டுள்ளது. சிறிய தொடர்பியல் பிசகுக் கூட, எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார்.
திருமணங்களில் நிலவும் மூட பழக்கங்களை சுட்டிக்காட்டி, தெளிய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். பொறுப்புடன் எழுதப்பட்ட நுால். முன்னேறத் துடிப்போருக்கு நல்ல பாடம் கற்பித்து வழிகாட்டும்.
– மலர்