சங்கப் பாடல் வரிகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் மிக விரிவாக கோட்டை ஆய்வுகள் மேற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.
மன்னர்களுக்குள் ஏற்பட்ட பகைமை, பொறாமை, பணியாமை, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றால் நடந்த போர்களுக்கெல்லாம் கோட்டைகளே தாக்குதல்களையும், தண்டனைகளையும் ஏற்று காலப்போக்கில் சிதிலமடைந்த விபரங்கள், வரலாற்றுச் சம்பவங்களின் குறிப்புகளோடு தரப்பட்டுள்ளன.
அன்றைய நாடுகளின் அமைப்பு, வானளாவிய கோட்டைகளின் அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பக் கலைகள், பல மன்னர்களால் கைப்பற்றப்பட்டு கைமாறி வந்த கோட்டைகளின் கதைகள், போர்களின் விபரங்கள், கோட்டைகள் அமைந்த ஊர்களின் இன்றைய பெயர்கள் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.
பாழி மலைக்கோட்டை, செங்கண்மா கோட்டை, ஐந்தெயில் கோட்டை, ஏழெயில் கோட்டை, பேரெயில், கானப்பேரெயில், ஆமூர் கோட்டை, தகடூர் அதியமான் கோட்டை, புதுக்கோட்டை, பொற்பனைக் கோட்டை, மதுரைக் கோட்டை, காஞ்சிக் கோட்டை போன்றவை சங்க காலப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
சங்க காலத்துக்கு பின், பேரரசுக் கோட்டைகளின் கட்டடக் கலைகளில் இருந்த மாற்றங்கள், போர் உத்திகளுக்கேற்ப மேம்பட்ட தொழில் நுட்பங்களோடு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், கோவில்களே கோட்டைகளாக மாற்றப்பட்ட விபரம், கோட்டைகளின் உட்பகுதியில் உருவாக்கப்பட்ட கோவில்களின் விபரம் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.
நுாற்றாண்டுகளாக ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ பேரரசுகளின் கோட்டை வரலாற்றுப் பின்னணிகளோடு, பின்னர் வந்த சேதுபதிகள், மருது பாண்டியர்கள், பாளையக்காரர்கள், பூலித்தேவன், திப்பு சுல்தான் ஆகியோரின் கோட்டைகளின் விபரங்களும், பாராமகால் கோட்டைகள், நவாபு கோட்டைகள், தீவுக் கோட்டைகள், ஐரோப்பியர் கோட்டைகள் பற்றிய அரிய தகவல்களும் தனித்தனியே தந்திருப்பது சிறப்பு.
ஐரோப்பியரின் கோட்டைகளில் ஒன்று தான், தமிழகத்தின் தலைமைச் செயலகம் இயங்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு வரலாற்றுப் பின்புலம் தெரியாத பல கோட்டை விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள விரிவான நுால். மன்னராட்சிகளின் உயர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் அறிந்து கொள்ள உதவும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு