சங்க இலக்கியத்திலிருந்து சில பாடல்களையும், தனிப்பாடல் திரட்டிலிருந்து மிகுதியான பாடல்களையும் எடுத்து ஈர்க்கும் வண்ணம், பொருள் அடர்த்தியோடு வடிவமைத்த கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பரந்து பட்ட தேடல் முயற்சியையும், சொல்லின் பொருளைச் சீர்துாக்கி நிறுத்தும் பாணியில் புதுமையையும் காணலாம். சொற்பொருள் நுட்பங்கள் அலுப்பு தட்டாதவாறு சுவைபட அமைந்துள்ளன.
சங்கப் புலவர்களையும், பிற்காலப் புலவர்களையும் அறிமுகப்படுத்தும் விதமே அலாதியானது. எடுத்துக் கொண்ட நுால் பற்றிச் சுருக்கமான வரலாறு, தனிப் பாணியிலான விளக்கம், நிகழ்கால அரசியல், சமூகம் பற்றிய எள்ளல் ஆகியவை படிக்கத் துாண்டுகின்றன.
தமிழின் இலக்கியப் பரப்பை நன்கு அறிந்த பின்னணியில் கட்டுரை செதுக்கப்பட்டுள்ளது. பழஞ்சொற்களின் பொருளையும் ஆங்காங்கே காட்டிச் செல்கிறார்.
‘கரவம் கரந்ததோ, சொல்லொக்கும் சுடுசரம், செத்தாருள் வைக்கப்படும், மூப்பும் குறுகிற்று, கொட்டிக்கிழங்கு, கலிங்கம்’ போன்ற கட்டுரைகள் சுவைத்து அனுபவிக்கக் கூடியவை. பரந்துபட்ட இலக்கியத் தடத்தில், கவி விளையாட்டு நடத்தியிருக்கும் புலமையை வியந்து பாராட்டலாம்.
– ராம.குருநாதன்