பொன்மொழிகள் என்றாலே, மெத்த படித்த மேதாவி, சான்றோர், ஞானிகளின் மொழியாக இருக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை தகர்த்துள்ள நுால். பொன்மொழி என்ற சொல்லுக்கு புதிய இலக்கணம் வகுத்து, பயனுள்ள மொழிகளை கொண்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள நுால்களில் இருந்து, பயனுள்ள குறிப்புகள், அறிவுரைகளை, பொருளை எளிமையாக உணர்த்தும் சொற்கோர்வைகளைத் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது.
நுாலில், ‘அன்பு உள்ளத்தில் இருந்தால், அதை உள்ளத்தோடு வைத்துக் கொள்ளாமல் உதட்டளவில் சொல்லவும்; அதை உதட்டோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல், உள்ள ஈடுபாட்டோடு உரிய செயலை செய்யவும் வேண்டும்’ என்ற பொன்மொழி முதல் பக்கத்தில் அலங்கரித்து, அன்பை பறைசாற்றுகிறது.
இது போல், அன்பு, அறிவு, அழகு, ஆறுதல், இயல்பு, இனிமை, உழைப்பு, ஊக்கம் என அகர வரிசையில் பல சிறிய தலைப்புக்குள், பொருத்தமான பயன்மொழிகள், பொன்மொழிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. படிக்கவும், உரிய இடங்களில் உரிய நேரத்தில் பயன்படுத்தவும் ஏற்ற வகையில் உள்ளன.
அகராதியில், உரிய சொல்லுக்கு பொருளை தேடி, சுலபமாக அடைவது போல், எளிதாக விரும்பிய பொருளுக்கு உரிய பொன்மொழியைக் கண்டடையலாம். விரும்பிய உடன் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
புத்தகத்தில் உள்ள சில பயன் மொழிகள்...
* படித்து அறிந்து கொள்வதை விட, நம் அனுபவத்தின் வாயிலாக வெளிப்படும் விஷயங்கள், உரித்துக் கொடுக்கப்படும் வாழைப் பழம் போன்றவை
* வளைந்து கொடுத்து வாழ்பவர்களை அனைவரும் விரும்புகின்றனர். அவர்களுக்காக மற்றவர்கள் எதையும் விட்டுக் கொடுக்கின்றனர்
* பிரச்னையை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தே அது பூதாகரமாகிறது; அல்லது பூனையாகிறது
* எதிலும் எதிர்மறையான அணுகுமுறையால் எந்த பயனும் விளையப்போவதில்லை
* பாராட்டு என்பது விண்ணப்ப மனு. அவற்றை வாங்கிப் போடப் போட பலருக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாகி விடுகிறோம்.
இவ்வாறு அனுபவத்தின் திரட்சியாக மிளிர்கின்றன, இந்த புத்தகத்தில் உள்ள பொன்மொழிகள். சொற்பொழிவுகளில், மேடை பேச்சில், நம்பிக்கையூட்டும் ஆறுதல் சொற்களில், கட்டுரைகளில், மேற்கோளாக பயன்படுத்த ஏற்ற வகையில் உள்ளன.
நீண்ட உரைகளால் விளக்கி சாதிக்க முயல்வதை, குறைந்த சொற்சேர்க்கையால் சாதிக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. அன்றாடம் வாழ்வில் பயன்படுத்த ஏற்ற வகையில் உள்ளது.
– அமுதன்