பிரபல கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ‘முகில் மீது தனியாய் திரிந்தேன்’ என்ற தலைப்பில் எழுதிய கவிதையுடன் துவங்குகிறது இந்த நுால். மறைந்த பிரதமர் இந்திரா விரும்பிய கவிதைகளில் இதுவும் ஒன்று.
இயற்கை மீது இந்திராவின் பேரார்வத்தை வெளிப்படுத்தும் தகவல்கள் கொண்ட நுால் இது. அவருக்கு, இயற்கை மீதான அக்கறை எங்கிருந்து வந்தது, எவ்விதம் வளர்ந்தது, எவ்வாறு பிரதிபலித்தது, சூழலியல் நலனில் எடுத்த முடிவுகள் என்ன போன்றவற்றுக்கு விடை தரும் வகையில், உரிய ஆதாரங்கள் தந்து பூர்த்தி செய்கிறது.
பிரதமராக இருந்த போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக எடுத்த முடிவுகளையும் விவரிக்கிறது. அவை, கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகம், ஏழு இயல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆதாரக் குறிப்புகள், தனியாக இணைக்கப்பட்டுள்ளது. துணை நுால் பட்டியல் விபரமும் அளிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற இந்திய ஆளுமைக்கு இயற்கை மீது இருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. எளிய தமிழ் நடையில் ஆக்கியுள்ளார், மொழிபெயர்ப்பாளர் முடவன் குட்டி முகம்மது அலி.