பாம்பு, முதலை போன்ற உயிரினங்களுடன் நெருக்கமாக வாழும், ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை வரலாற்று நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் பாம்பு, முதலைகளை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டு வருபவர் விட்டேகர். இந்த அற்புத பணிக்கு நகர்ந்து வந்த விதமும், வழித்தடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மீதான புரிதலைத் துாண்டுகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற எதிர்மறை எண்ணம், நம்பிக்கை நிறைந்த நாட்டில், அவற்றை தகர்க்கும் வழிமுறைகளுடன் களத்தில் செயல்படும் அனுபவம் விளக்கமாக உள்ளது. பல்லுயிரின பாதுகாப்பு தான் இந்த வாழ்க்கை பயணத்தின் அடிநாதம். அதை அணுக நடக்கும் முயற்சிகள், சம்பவங்களாக உள்ளன. அதை, இந்த நுாற்றாண்டின் இயற்கை வரலாறாகவும் கொள்ளலாம்.
தமிழர்களுக்குள் இருந்த வாழ்க்கை நெறியை புதுப்பிக்கும் வகையில் காட்டுகிறது. சூழல் சார்ந்த வாழ்வின் முக்கியத்துவத்தை தொட்டு காட்ட முயல்கிறது. மொழிநடையின் விவரிப்பு, பிசிறு தட்டுகிறது. இது, மையக்கருத்தை நெருங்க சற்று சிரமத்தை ஏற்படுத்துகிறது.
– அமுதன்