தமிழில் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் பாடுவோரின் அனுபவ ஒளிக்கீற்றுகள், ஆன்மாவைத் துாய்மைப்படுத்துவன. மேலைநாட்டிலிருந்து தமிழகம் வந்த இறை பணியாளர்களும், தமிழகத்தில் வாழ்ந்த கிறிஸ்தவத் தொண்டர்களும் இயற்றியுள்ள கீர்த்தனைகளை தொகுத்திருக்கிறார் நுாலாசிரியர்.
தமிழில் கீர்த்தனைப் பாடல்களை இயற்றிய கவிஞர்களின் வரலாறு, அவை பாடப்பட்ட பின்னணி பற்றி விரிவாக எழுதப்பட்டு உள்ளது. புதிய திருச்சபையின் இறை வழிபாட்டின் தேவையை நிறைவு செய்வதாய் உள்ளன.
வீரமாமுனிவர் துவங்கி, பிரிக்கன்ரிட்ஜ் வரை கவிஞர்களின் அரிய தொகுப்பாக விளங்குகிறது. மேலைநாட்டுப் பாதிரிமார்கள் துவங்கி வைத்த கீர்த்தனைகள், பிற்பாடு மேலைநாட்டு இசைக்கருவிகளுக்குத் தக்கவாறு பாடப்பெற்றமை, தமிழகத்தில் வேதநாயக சாஸ்திரியார் புதுமையான இசை இயக்கத்திற்குத் தலைமைக் கவிஞராக இருந்து பரவலாக ஆக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கீர்த்தனைகளை மட்டுமின்றி, பாடியோரின் வாழ்க்கை வரலாற்றையும் விவரித்திருப்பது சிறப்புக்குரியது.
– ராம.குருநாதன்