பெண்ணை தெய்வமாக போற்றி, சர்வமும் சக்திமயம் என்று கொண்டாடுவது நம் வழக்கம். சக்திக்கு ஆடி மாதத்தை ஒதுக்கி, அம்மன் வழிபாடு நடத்துகிறோம். நவராத்திரியில் சக்தியை ஒன்பது விதமாக அலங்கரித்து கொண்டாடுகிறோம்.
பசித்த வயிற்றுக்கு சோறு தான் தெய்வம்; வலிக்கும் மனசுக்கு தீர்வு தான் தெய்வம். சக மனிதர்களிடம் பகிர இயலாததைச் சொல்ல, இறைத் தலங்களை நோக்கிப் பயணிக்கிறோம்.
அத்தகைய 40 சக்தி இறைத் தலங்கள் குறித்து அனுபவ பூர்வமாக எழுதி இருக்கிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி. அந்த புனித தலங்களுக்கு கையைப் பிடித்து அழைத்து செல்கிறார் என்றே கூறலாம். அந்த அளவு உணர்வு பூர்வமான எழுத்துக்கள்.
‘என் கூட இரு நீ எப்போதும், அது போதும், எனக்கு நீ வழி தடத்து, தாய்மடியின் சுகானுபவம்’ என அம்மையை எண்ணி உருக வைக்கிறது. ஆன்மிகவாதிகளுக்கு அற்புதமான பொக்கிஷம் இந்த நுால்.
– இளங்கோவன்