கன்னட மொழியிலிருந்து, அல்லமர் தத்துவம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னட பாடல்களை தமிழில் செய்யுள் வடிவில் தந்து, அவற்றிற்கு விரிவுரையும் தந்துள்ளார். ‘விடியலில் இஷ்டலிங்கத்தைத் தொட்டு, சூரியோதய வேளையில் பக்தனின் முகத்தைக் காண்பாய்! பிறவிப்பயன் இதுவன்றோ’ என்ற அல்லமர் கருத்துக்கு, வைகறை சிவ வழிபாடு எல்லா நலமும் தரும் என்ற பசவேசுவரர் வசனத்தை ஒப்பிட்டுக் காட்டி, ஆண்டாளின், ‘சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து’ எனும் திருப்பாவைப் பாடலையும் சேர்த்துக் காட்டியுள்ளது, ஆழ்ந்த மொழிப் புலமையைக் காட்டுகிறது.
‘மாயை ஆகிய பெண்ணின் ஐம்புலக் குழந்தைகள், ஆழம் நிறைந்த மோகக் கிணற்றில் விளையாடி விழுந்து விடுகின்றனர். அதிலிருந்து வெளியேறும் வழியை அறிவதில்லை. இப்படி இருந்தால் சுடர்விடும் ஆன்மாவை எப்படி அறிய முடியும் போன்ற தத்துவச் சிந்தனைகள் அணிவகுத்து நிற்கின்றன. சிவனருள் மனதில் பதிகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்