தமிழில் வெளிவந்த முதல் பயண நுால் என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவம், வழிகாட்டுதலுடன் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மகாசபை நிகழ்வுகள் பற்றியும் விவரிப்பு உள்ளது.
கோவையைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடு, காங்கிரஸ் மகாசபை கூட்டங்களில் பங்கேற்க, இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை எழுதியுள்ளார். திவ்விய தேச யாத்திரையின் விஷய அட்டவணை என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. அதில், புத்தக உள்ளடக்கம் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. பயணத் தகவல்களை விரிவாகவும், மற்றவருக்கு பயன் தரும் வகையிலும் பதிவு செய்துள்ளார். கண்டு வந்த ஊர்களைப் பற்றிய புராணச் செய்திகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நுாலின் பல பகுதிகள் அற்புதமான கவித்துவத்துடன் விளங்குகிறது.
கடின மொழி நடையில் இருந்தாலும், தகவல்களில் உள்ள சுவாரசியம் வாசிக்கத் துாண்டுகிறது. ஆன்மிக தலங்கள் பற்றி உருக்கமான பிரார்த்தனை நடையில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் கண்ட வன்முறைகளையும் கண்டித்து எழுதியுள்ளார். ஆன்மிக தலங்களில் பெண்கள் படும் துன்பம் பற்றியும், விபசாரத்தில் தள்ளப்படுவது குறித்தும் கவலை தொனிக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளில் கண்டவற்றை பாசாங்கு இன்றி பதிவு செய்துள்ளார். புதிய இடங்களில் தகவல் சேகரிக்க கையாண்ட வழிமுறையும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த காலத்தில் நடந்த வளர்ச்சியும் இயல்பாக பதிவாகியுள்ளது. வளர்ச்சியில் குறைபாட்டையும் கவனப்படுத்தி எழுதியுள்ளார்.
நீண்ட பயணத்துக்கு திட்டமிடல், முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை, உணவில் கவனம், தங்குமிடம், தகவல் சேகரிப்பு, பயண வழியில் வசதி வாய்ப்புகள், தடங்கல்கள், எச்சரிக்கைகள், செலவு விபரம் என பலவும் பதிவாகி உள்ளன.
புத்தகத்தின் கடின நடை கருதி, தகவல்களை எளிமையாக புரிந்து கொள்ள ஏதுவாக, நீண்ட முன்னுரையை எழுதியுள்ளார் பதிப்பாசிரியர் முருகேச பாண்டியன். அதில், உள்ளடக்கம் சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் தரப்பட்டுள்ளது. கோல்கட்டாவில் நீண்ட தெருவில் விபசாரம் நடந்ததை மிக சுவாரசியமாக விவரிக்கிறது. நாட்டில் அந்த காலகட்டத்தில் கண்ட கீழ்மை, மேன்மைகளை பாகுபாடு இன்றி பதிவு செய்துள்ள நுால்.
– அமுதன்