தமிழகமெங்கும் தினமும் தேனாய் பாய்ந்து கொண்டிருக்கும், பக்தி இசைப் பாடல்களின் தொகுப்பு நுால். அருள் வடிவாக ஒலிக்கும், ‘ஞானச்சுடரே கணபதியே... நலமே அருள்வாய் குணநிதியே...’ என்ற பாடலில் துவங்கி, ‘சாமியப்பா... சரணம்... சரணம் ஐயப்பா...’ என்ற பாடலுடன் முடிகிறது நுால்.
தமிழகத்தில் சினிமா பாடல்களை விடவும், பக்தி இசைக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பாடகியர் சுசிலா, வாணிஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரியின் இனிய குரல்கள், பக்தர்கள் மனதில் நீண்ட நெடுங்காலமாக நீங்கா இடம் பெற்றுள்ளன.
எளிய சொற்களாலான சந்தம் மிக்க பாடல்களை அவர்கள் உச்சரித்திருக்கும் விதமும், அதை தாங்கி நிற்கும் இசையும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இசைக்குள் துடிக்கும் மெல்லிய பாடல் அடிகள் தான் இவற்றுக்கு துாண். இசையுடன் முணுமுணுக்க முடியாவிட்டாலும், துாணாக நிற்கும் பாடல் அடிகள் பலருக்கும் மனப்பாடம்.
அந்த எளிய சந்தமிக்க அமைதி தரும் பாடல்களை எழுதியுள்ளவர் கவிஞர் மு.தவசீலன். இசை வடிவம் பெற்று நீண்ட காலத்துக்கு பின், அந்த பாடல்கள் நுால் வடிவம் பெற்றுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும், பன்னெடுங்காலமாக தமிழகம் முழுதும் அதிகாலையில் இசை மழையாய் பொழிந்து கொண்டிருக்கின்றன. புல் மீது அமரும் பனித்துளிகளை வருடும் உணர்வை பிரதிபலிக்கின்றன.
திகட்டாத அமுதமாய் பக்தர் மனதில் குடியிருக்கின்றன. வரம் அருளும் சந்தத்தை கோர்த்து, தேனலையாக உருவாக்கிய, ‘வைகறைப் பொழுதில் விழித்தேன்... அந்த வடிவேல் முருகனை நினைத்தேன்...’ என்ற பாடல் வரிக்கு இணையாக மற்றொன்றில்லை. அது காலை பொழுதை மேலும் பசுமையாக்குகிறது.
அதுபோன்றே, ‘ஆதிபரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு...’ என்ற கானமும் மனதில் பாய்ந்து பரவசம் தந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று, மங்கா புகழுடன் விளங்கும் 64 பாடல்கள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தேவ மயக்கத்தை உண்டாக்கும், ‘தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி... அதை தருவதுதான் முருகா உன் சன்னிதி...’ என்று துவங்கி மனக்குளத்தில் நீந்தி விளையாடுகிறது ஒரு பாடல். இதுபோல் கனிந்த பாடல்கள் பல இந்த தொகுப்பில் உள்ளன.
இசை வழியாக தமிழர் மனதில் புகுந்திருந்த பக்தி பாடல்களை, அச்சு வடிவில் காணும் போது மேலும் பரசவம் ஏற்படுகிறது. மனித மனங்களில், தேவ ரகசியத்தை பாதுகாக்கும் தொகுப்பு நுால்.
– மலர்