சென்னைப் பல்கலைக் கழகத்தில், வி.ஆர்.ராமச்சந்திர தீட்ஷிதர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். இவர், 1940 நவம்பர் 29, 30ம் தேதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவே நுால் வடிவம் பெற்றுள்ளது. அது தமிழாக்கம் பெற்றுள்ளது.
பழந்தமிழ் நாகரிகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் என்னும் தலைப்பில், ‘திராவிடர்கள், தென் இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது’ என்று கூறுகிறது.
குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட தலை, பரந்த மூக்கு, நீண்ட முன் கைகளை உடையவர் திராவிடர்கள். பழங்கால மூல மக்களாக இருந்த பின், ஆரியர், சாகர், சித்தியன் மற்றும் மங்கோலிய இனத்தோடு கலந்து விட்டனர் என பொருண்மை விளக்கப்பட்டுள்ளது. திராவிடம் என்னும் சொல்லாட்சி குறித்தான தேடலை ஆழமாக ஆய்ந்துள்ளது.
அதன் பயனாக மொழி, பண்பாடு, கலை இலக்கியங்கள், உணவு முறைகள், வாணிபம் தகவல்களைக் கொண்டமைந்துள்ளது. நாக வழிபாடு, லிங்க வழிபாடு, தாய் வழி உறவு, தேவதாசி முறை என்பன, குடிபெயர்வுகளின் வாயிலாக நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூல நுாலாசிரியரின் கருத்து, பல ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்