கோவை சொக்கம்புதுாரில் வாழும் தேவேந்திரர்களின் குலதெய்வம் என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும் நுால் மாசாணியம்மன் வழிபாடு. மாசாணியம்மன் வழிபாடு பற்றி தெரிவிப்பதற்கு முன், பழங்காலம் முதல் இருந்து வரும் சிறுதெய்வ வழிபாட்டையும் தொன்மத்தையும் விளக்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிற்கும், சிறுதெய்வ வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும், தெய்வ நம்பிக்கையுடன் கூடிய சடங்குகளின் விளக்கங்களையும் வரையறுக்கிறது.
கொங்குநாட்டில் வாழும் தேவேந்திர குல வேளாளர் வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது. மாசாணியம்மன் தொடர்பான கதைகளையும், கதைப் பாடல்களையும், போற்றிப் பாடல்களையும் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தியுள்ளது.
மாசாணியம்மன் வழிபாட்டில் இடம்பெறும் சடங்குகள் அனைத்தையும் பட்டியலிட்டு விளக்குகிறது. அது தொடர்பான தொன்மமாக 25 கதைகளைப் பின்னிணைப்பில் தந்துள்ளது. நுாலின் துல்லியத்தன்மையை இது கூட்டுகிறது.
தொகுத்த அனைத்தையும் எந்தெந்த இடங்களில் முறைப்படுத்தித் தர வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டுத் தந்துள்ளார். வட்டாரத் தெய்வமாக விளங்கும் மாசாணியம்மன்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு உதவும். நாட்டார் தெய்வ ஆய்வு மேற்கொள்வோருக்கு வழிகாட்டி நுால்.
– முகிலை ராசபாண்டியன்