மண்ணில் இமயமும், விண்ணில் கதிரவனும் போல் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் மகாகவி பாரதியார். அவரின் நினைவு நுாற்றாண்டில், புதிய கோணத்தில் அவரை கண்முன் நிறுத்தும் நுால்.
கண்கண்ட காட்சி என்ற வரிசையில், பாரதியின் புதல்வியர் செல்லம்மா பாரதி, தங்கம்மாள் பாரதி, பேத்தி சகுந்தலா பாரதி, சீடர்கள் பாரதிதாசன், வ.ரா., ஆகியோர் பழக்கத்தில் தெறித்த கவித்துவத்தையும், மனிதத்துவத்தையும் அழகாக எழுதியுள்ளார்.
வறுமையில் இருந்தாலும் தோற்றத்திலும், உடையிலும் பெருமை மிளிர வேண்டும் என்பார் பாரதி. புதிய கோட்டும் குல்லாவும் தைத்த போது, மிகப் பெரிதாய் இருந்தும் தையல்காரன் மேல் கோபப்படவில்லை.
‘உன் கோட்டுக்கு ஏற்ற தொந்தி என்னிடம் இல்லை...’ என நகைச்சுவையாக சொன்னார் பாரதி. அந்த கோட்டை, பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டார். இதன் வாயிலாக அவரது பண்பு நலம் விளங்கும்.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைப் படித்ததும் நாட்டின் சுதந்திரச் சூழலுக்கு ஏற்ப மாற்றி ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார், பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என பாடியுள்ளார் பாரதி. இவை பல பல விஷயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாரதியின் பாடல்களுக்கு புதிய ராக பாவங்களை காட்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்