கொங்கு வட்டார மொழியில், 30 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சமூக நடப்புகள், சடங்குகள், உறவுகள், நாகரீகம் அதிலுள்ள நன்மை, தீமைகளை சீர்துாக்கப்பட்டுள்ளன. நாகரிகம் எந்த திசையில் செல்கிறது என்பதை, ‘பொம்பொறப்பு’ கட்டுரை சுட்டி காட்டுகிறது. இயற்கையில் இருந்து விலகி, அறிவியலோடு ஒன்றிவிடும் இக்கால சமூகம் எப்படி சிந்திக்கிறது என்பதை விவரிக்கிறது. இயற்கை மருத்துவம், எவ்வளவு மகத்துவமானது என, ‘பண்டுதம்’ கட்டுரை அழகாக சொல்கிறது. வாழ்க்கை அர்த்தத்தை, இன்றைய சமூகத்திடம் உணர வைக்க, கொங்கு நாகரிகம் வழியாக எழுதப்பட்டுள்ளது.
சில கட்டுரைகள், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. வட்டாரமொழியில், பேசப்பட்ட வார்த்தைகள் அங்குள்ள வாழ்வு முறையை பிரதிபலிக்கிறது. ஆங்கிலம் தாக்கத்தால், நுாற்றாண்டுகளாக பேசிய பல வட்டார வார்த்தைகள், மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு வருகிறது. கொங்கு அகராதி என தனி நுாலாக வடிவமைக்க, பல வார்த்தைகள் கொட்டி கிடக்கின்றன.
– டி.எஸ்.ராயன்