சிலப்பதிகாரத்தில் பெற்றிருந்த ஆளுமை காரணமாக ‘சிலம்புச் செல்வர்’ என்று சிறப்பிக்கப்படும் ம.பொ.சிவஞானம், பன்முகம் கொண்டவர். திருவள்ளுவர் பற்றியும் பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றியும் பல நுால்களை எழுதியவர்.
இவரைப் பற்றி அறிஞர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்து வழங்கியுள்ள நுால். குன்றக்குடி அடிகள், மு.வரதராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், எம்.ஜி.ஆர்., மற்றும் பலர் சிறப்பித்துக் கூறியுள்ளனர். ரா.பி.சேதுப்பிள்ளை, ம.பொ.சி.,யை, ‘சிலம்புச் செல்வர்’ என்ற அடைமொழி வழங்கி சிறப்பு செய்தார்.
ம.பொ.சி.,யின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, பங்கேற்ற நிகழ்வுகளில் உடன் பங்கேற்ற பிரபலங்களின் அனுபவங்களை அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். தமிழ் ஆட்சி மொழியாக அவர் செய்த பணிகளும் விரிவாக கூறப்பட்டுள்ளன. ம.பொ.சி., பற்றியும், அவரது சாதனைகளைப் பற்றியும் அறிய உதவும் தொகுப்பு நுால்.
– முகில் குமரன்