நெய்வேலி நிலக்கரி நிறுவன வளர்ச்சி வரலாற்றை, பணி அனுபவ பின்புலத்துடன் விவரிக்கும் நுால். மாற்றங்களை ஆவணப்படுத்தும் உள்ளூர் வரலாற்றுப் பதிவாக உள்ளது. எளிய மொழி நடை வாசிக்க ஏதுவாக உள்ளது. சுரங்கம் துவங்கியதில் இருந்து, வளர்ந்த விதம், உழைப்பு, அதை நெறிப்படுத்தும் நிர்வாகச் செயல்பாடு என கவனமுடன் பதிவாகிஉள்ளது.
மொத்தம் 22 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. போட்டோ மற்றும் ஆவண ஆதாரங்கள் உரிய இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்ட பயன்பட்ட இயந்திர படங்கள், பணி நடைமுறை என காட்சி பதிவுகளும் உள்ளன.
முதல் அத்தியாயம், ‘இளம்பருவத்து நினைவலைகள்’ என்ற தலைப்பில் வறுமையால் வாடிய குடும்பத்தில் பிறந்தவர், பெற்ற கல்வி எடுத்து வைத்த அடிச்சுவடுகள், தடயம் மாறாமல் பதிவாகி உள்ளது.
தடங்கல்களை தாண்டி, சுரங்க நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய விதத்தை விவரிக்கிறது. அதன் ஊடாக நிறுவன செயல்பாட்டை முன்னிறுத்தியுள்ளது. அது அனுபவம் மற்றும் நாட்குறிப்பு ஆவணங்களுடன் பதிவாகி உள்ளது.
தனிமனித முயற்சி, சறுக்கல்களை சரி செய்யும் போராட்டம் எல்லாம் நம்பிக்கையாக கனிவதை அழகாக படம்பிடிக்கிறது. அதே நேரம், பொதுதுறை நிறுவன உற்பத்தி சார்ந்த போராட்டம் என்ற படிமம், வாழ்க்கை கதையை மிஞ்சும் வண்ணம் வெளிப்பட்டுள்ளது. நெய்வேலி சுரங்க இயக்க தகவல் பின்னல்கள் கொண்ட சுவாரசியமான நுால்.
– மலர்அமுதன்