இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் எப்படி காட்சிப்படுத்தப்பட்டனர், கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டனர். அவை சமூகத்தில் எந்தவித தாக்கத்தை உருவாக்கியது என்பதை விவரிக்கும் ஏழு கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழின் முந்தைய சினிமாவான, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன் போன்ற படங்களில், முஸ்லிம்களின் வரலாற்று புனைவுகளாக படைக்கப்பட்டு இருக்கும். ரோஜா, பம்பாய் போன்ற படங்கள், கலாசார கூறுகள் இல்லாமல், அரசியல் பேசியவை என்கிறது. 1990க்கு பிந்தைய பல சினிமாக்கள், முஸ்லிம்களை சமூக விரோதிகளாக சித்தரிக்கப்படுவதாக கவலை கொள்கிறது.
ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை பேசிய சினிமாக்கள் குறித்தும் அலசியுள்ளார். ஹிந்தி சினிமாவில், முஸ்லிம் பின்னணி சார்ந்த காட்சி, வசனம், முடிவுகள், அதனால் ஏற்பட்ட அரசியல் தாக்கம் குறித்து துல்லியமாக ஆய்வு செய்து விவரிக்கிறார். முஸ்லிம்கள் கதை, கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட பட தலைப்பு போஸ்டர், நடித்த நாயகன், நாயகியரின் படங்கள் இடம் பெற்றது, கட்டுரையை சுவாரசியப்படுத்தியது. சினிமா விமர்சகர்கள், நல்ல சினிமா எடுக்க துடிப்பவர்கள் வாசிக்கலாம்.
– டி.எஸ்.ராயன்