காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது.
தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். இதை இயற்றியவர் பெரும்பற்றப்புலியூர் நம்பி. இவர் வேம்பத்துார் என்னும் ஊரில் பிறந்த காரணத்தால் இவரை வேம்பத்துாரார் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நுாலை உ.வே.சாமிநாதையர் குறிப்புரை எழுதி, 1906ல் பதிப்பித்துள்ளார். இந்த நுாலுக்குத் தெளிவுரையை முனைவர் மு.அருணகிரி வழங்கி உள்ளார். பாடல்களை பதம் பிரித்து, தெளிவுரையை அருஞ்சொற்பொருளுடன் விளக்கமாக தந்துள்ளார்.
இந்திரன் பழி தீர்த்த திருவிளையாடல் முதல், அறுபத்து நான்காவது வேதம் உணர்த்திய திருவிளையாடல் வரை, அனைத்துத் தலைப்பிலும் திருவிளையாடல் என்னும் சொல் தவறாது இடம் பெற்றுள்ளது.
நுால் உள்ளுரையை முதலில் உரைநடையில் எளிமையாக வழங்கியுள்ளார். இது கதையை முழு அளவில் படித்து புரிந்து கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. பாடல்களைத் தேடிப் பார்ப்பதற்கு வசதியாக செய்யுள் முதல்குறிப்பு அகராதியை, புத்தகத்தின் நிறைவு பகுதியில் தந்துள்ளார்.
மதுரை நகர காவல் பற்றியும் அழகாக விளக்கியுள்ளார். இந்த நகரை கன்னி, திருமால், காளி, ஈசன் என்ற நால்வரும், நான்கு திசைகளில் காவல் காக்கின்றனர் என்ற செய்தியை தெரிவிக்கிறது. ஆதி திருவிளையாடல் புராணம் என்ற நுாலை எல்லாரும் படித்து மகிழ்வதற்கு வசதியாக அழகிய முறையில் அச்சிட்டு, பிரமாண்டமாக வெளியிட்டு உள்ளனர். சிவபெருமானின் 63 திருவிளையாடல்களை அறிந்து கொள்வதற்கும், தமிழ் இலக்கியப் பெருமையை உணர்ந்து கொள்வதற்கும் உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்