சமூகத்தில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என பகுத்தறிவுடன் சிந்திக்கத் துாண்டும் நுால். இதை, திருக்குறள் வரிகளை கொண்டு, விளக்கி படைத்துள்ளார் நுாலாசிரியர். நல்ல வாழ்க்கை வாழ்ந்து, நல்ல மனிதர்களை உருவாக்கி, நல்ல சமூகம் படைப்பதே அர்த்தமுள்ள வாழ்வாக அமையும் என்பதை உணர்த்துகிறார்.
யார் கைவிட்டாலும், கல்வி ஒன்று தான் கரை சேர்த்து வாழ வைக்கும். அதேவேளையில் படித்திருந்தும், தீய ஒழுக்கத்தால் கெட்ட செயல்களை செய்து, அதை மூடி மறைத்து, சமூக அவலங்களை உருவாக்கும் மனிதர்களும் உள்ளனர்.
அது போன்ற நபர்களை வெறுத்து ஒதுக்கவிட்டு, தொடர்பின்றி வாழ்வதே சிறந்தது என விளக்குகிறார். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, கொடிய வைரஸ்களை எதிர்கொண்டு நலமுடன் வாழவும் வழிகாட்டுகிறார். அதேபோன்று மானம், கற்பு, பொறாமை, ஒழுக்கம், அன்பு, நன்றி, சுயநலம் போன்ற குணநலன்களை எப்படி பகுப்பாய வேண்டும்; எப்படி எதிர்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
நல்லொழுக்க வாழ்வு வாழ்ந்து, அதை பிறருக்கு கற்றுக் கொடுத்து, ஆரோக்கியமான சமூகம் படைக்கத் துடிப்பவர்கள் வாசிக்கலாம்.
– டி.எஸ்.ராயன்