திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு கடவுள், அன்பு, அருள், இல்லறம், ஒழுக்கம், நட்பு ஆகிய அதிகாரங்களை தலைப்பாக வைத்து வெற்றி-, தோல்வி என்று முடிக்கும் 67 சொற்களின் அகராதி விளக்கமே இந்த நுால்.
அன்பு என்பதற்கு பற்று, உருக்கம், நேசம், அற்பு, நார், ஈரம், தயவு எனும் 21 வேறு பெயர்கள் உள்ளதை காட்டியுள்ளார். தொடர்பு உடையாரிடம் எழும் பற்று மன நெகிழ்ச்சி என்ற குறிப்பும் தந்துள்ளார்.
அகந்தையின் வளர்ச்சி, அன்பின் தளர்ச்சி, அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, அறிவு உணர்த்தும், அன்பு நிகழ்த்தும் என்பது போல் 57 விளக்கத் தொடர்கள் தந்துள்ளார்.
பிச்சை என்ற சொல்லை, நன்கொடை வசூலிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு அளிப்பது அறம் ஆகாது. அளவின்றி உண்போருக்கும், உணவின்றி தவிப்போருக்கும் அறிவு மங்கிவிடும். ஆளும் தன்மையால் ஆண் என்றும், பேணும் தன்மையால் பெண் என்றும் அழைக்கப்பட்டனர். தன்னலம் கொண்டவன் தலைவனாகி விட்டால், அங்கிருந்த பணம் எல்லாம் இருட்டில் மறையும்.
நிகழும் நிகழ்ச்சிகளை மனம் எடுத்துக் கொள்ளும் விதமாகவே, இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. வாழ்வில் பெற்ற அனுபவங்களை அகராதியாகப் பட்டியலிட்டுள்ளார். பட்டை தீட்டிய வைரமாக பட்டறிவில் பட்டவை நுாலாகியுள்ளது.
–- முனைவர் மா.கி.ரமணன்