முத்தமிழ் பற்றிய விபரம், முச்சங்க வரலாறு, சங்க கால மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நுால்கள், காப்பியங்கள், இதிகாச, புராணங்கள், இடைக்கால இலக்கியங்கள், சமணர், பவுத்தர், கிறித்தவர், இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு, சைவ மடங்களின் சமயப் பணிகள், இடைக்கால, பிற்கால இலக்கியங்கள் போன்ற பொருண்மைகளை விளக்கும் நுால்.
பண்டைய இயல், இசை, நாடகத் தமிழ் இலக்கிய, இலக்கண நுால்கள், கலை நுால்கள் பற்றிய குறிப்புகளைத் தந்து, முச்சங்க வரலாறு மீதான ஆய்வு விபரங்கள் தரப்பட்டுள்ளன.
சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு நுால்கள் ஒவ்வொன்றின் அமைப்பு, அடியளவுகள், பொருண்மைகள் பற்றிய சிறு குறிப்புகள் தந்து, ஐந்திணை ஒழுக்கம் சார்ந்த மாந்தரின் அக, புற வாழ்வியல் கூறுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
நற்றிணை முதலாக எட்டுத்தொகை நுால்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து, அவற்றில் திணை சார்ந்து இழையோடும் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் பாடல் மேற்கோள்களுடன் வழங்கிஇருப்பது சிறப்பு. சங்க காலந்தொட்டு மாறி வந்த இலக்கியச் சூழல்கள் பதிவு செய்யப்பட்ட பயனுள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு