ஓலைச்சுவடிகள் இங்கே நுாலாக வந்துள்ளது. ஜோதிட அரிச்சுவடி, பெரிய சுந்தர சேகரம், ஜோதிடப் பிரகாசம், ஜோதிட சாகரம், ஜாதக சங்கரம், ஜாதக பாரிஜாதகம் ஆகிய நுால்கள், ஜாதக சாகரம் என்ற பெயரில் கடல்போல் காட்சி தருகிறது.
ஜாதகம் பற்றிய செய்திகளை மூலநுால் பாடல் வடிவில் தந்துள்ளது. அதற்கு விளக்கம் கீழேயே தந்துள்ளமை எல்லாருக்கும் புரியும் வகையில் உள்ளது. ஜாதகமே கூட்டிக் கழித்து, போட்டு முடிக்கும் கணக்கு தான்.
முதலில் விநாயகர், சிவன், திருமால், கலைமகள், நவகிரகங்கள், குரு, பெற்றோர் ஆகியோருக்கு வணக்கம் சொல்லப்பட்டுள்ளது. நாத்திகருக்கும், உலோபிகளுக்கும், நம்பாதவருக்கும் ஜோதிடம் கூறக்கூடாது என்கிறது இலக்கணம்.
முதல் தரங்கத்தில் பாவக கணிதம் முழுதும், மிகத் துல்லியமான கணித முறை கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக கிரக பார்வை கணிதம் சொல்லப்பட்டுள்ளது.
ஜாதக கணிதம், கிரக பலபிண்ட கணிதம், மாத தினப் பிரவேச கணிதம், பார்வை கணிதம், ஷோடசயோக நிர்ணயம், சகம கணிதம், பாவக பலன் முதலிய கணக்கு முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன. எதிர்காலத்தை ஜாதகம் மூலம் கணக்கிட்டு கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்